சில்லரை விற்பனையாளர்கள் சிலரின் சட்டவிரோத வர்த்தகம் மினி வேன்களில் பாதுகாப்பற்ற முறையில் டீசல் கொண்டு சென்று விற்கும் அவலம்

*  பணத்துக்கு ஆசைப்பட்டு மொத்தமாக விற்பனை

*  விலை குறைவு என்பதால் முறைகேடாக வாங்கும் நிறுவனங்கள்

சென்னை: தமிழகத்தில் சில  பெட்ரோல் பங்குகளில் டீசலை நூதன முறையில் மொத்தமாக கொள்ளை லாபத்துக்கு விற்று வருகின்றனர். இதற்காக விதிகளை மீறி, மினி டேங்கர் லாரிகளில் (2000 லிட்டர் முதல் 8000 லிட்டர் வரை) டீசல் எடுத்துச் செல்லப்பட்டு பொது இடங்களில் பஸ், லாரி, குவாரிகள் மற்றும் ஜெனரேட்டர் ஆகியவைகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக  விற்பனை செய்யப்படுகிறது. பாதுகாப்பற்ற முறையில் டீசல் டிரான்ஸ்போர்ட் செய்வது மற்றும் விற்பது பெரும் ஆபத்துக்கு வழிவகுக்கும். இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 5200 பெட்ரோல் பங்குகள் உள்ளன. ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் வாகனங்கள் வந்து செல்ல வழி, தீயணைப்பு கருவிகள், பாதுகாப்பு வழிமுறைகள், தரம், அளவு ஆகியவற்றை சோதிக்க ஏற்பாடுகள், விலைப்பட்டியல், அளவீடு கருவிகள் என்று முழுமையான பாதுகாப்பு மற்றும் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதனால் வாடிக்கையாளர்களால் ஏற்படும் தற்காலிக விபத்துக்களை தவிர பெட்ரோல் பங்குகளில் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இல்லை.

ஆனால் இப்போது கொள்ளை லாபம் பார்க்கும் நோக்கத்தில் சில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மொத்தமாக டீசலை விற்பது பெரும் விபத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது. பெட்ரோல் பங்க் சில்லரை விற்பனையாளர்களுக்கு மொத்தமாக டீசலை விற்பதற்கு அனுமதி இல்லை. அவர்கள் சில்லறை வர்த்தம் செய்யவே லைசென்ஸ் பெற்றுள்ளனர். ஆனால் சிலர் கொள்ளை லாபம் கிடைக்கிறது என்பதற்காக மீறி மினி டேங்கர் லாரிகளில் ஆபத்தான முறையில் கொண்டு சென்று விற்று வருகின்றனர்.  தமிழகத்தின் பல சில இடங்களில் டீலர்கள் இதுபோன்ற முறைகேடான டீசல் விற்பனையில் தீவிரமாக உள்ளனர். மொத்தமாக டீசல் தேவையுள்ள நிறுவனங்களை இ-மெயிலில் தொடர்புகொண்டு தங்கள் சேவையை விளம்பரப்படுத்தி வருகின்றனர். ‘எங்களிடம் தரமான டீசலை பெற்றுக்கொள்ளலாம். உங்கள் இடத்துக்கே வாகனங்கள் மூலம் கொண்டு சேர்க்கப்படும்’ என்று அதில் தெரிவிக்கின்றனர். ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்லூரிகள், பள்ளிகள், குவாரிகள், கட்டுமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஜவுளி ஆலைகள் உள்பட பல இடங்களுக்கு இதுபோல் டீசலை விற்று வருகின்றனர்.சில விற்பனையாளர்கள் 90 கி.மீ. தூரத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கூட ஆபத்தான முறையில் மினி வேன்களில் டீசல் நிரப்பி விற்று வருகின்றனர். சென்னையில் உள்ள சில விற்பனையாளர்கள் சிப்காட்டில் உள்ள பல வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த முறையில் டீசலை விற்று வருகின்றனர்.

சட்டவிரோதமான இந்த விற்பனைக்கு இவர்கள் கையாளும் முறைதான் ஆபத்தான வகையில் உள்ளது. மினி டேங்கர் லாரிகள், மினி வேன்களில் சிறிய டேங்க்குகளை  ஏற்றி அதில் டீசலை நிரப்பி, அனுமதியின்றி ஆபத்தான முறையில் முறைகேடாக எடுத்துச் செல்கின்றனர். வழக்கமாக ஓரிடத்தில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் டீசலை ஏற்றிச் சென்றால், அதற்கு ‘எக்ஸ்பிளோசிவ் லைசென்ஸ்’ ‘வெடிபொருளுக்கான உரிமம்) மற்றும் குறிப்பிட்ட ஆயில் கம்பெனியிடம் முறையான அனுமதியை பெற வேண்டும். ஆயில் நிறுவனங்களில் இருந்து அனுமதி பெற்ற டேங்கர் லாரிகளில்தான் பெட்ரோல் அல்லது டீசலை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த டேங்கர் லாரியை இயக்குபவர் யார் என்ற விபரத்தை குறிப்பிட்டு எடை அளவு கட்டுப்பாட்டு துறையில் அனுமதியை பெற வேண்டும். மேலும், டேங்கர் லாரி எவ்வளவு கொள்ளளவு உள்ளது. அதன் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து முறையான தகவல்களை எழுத்துப்பூர்வமாக உறுதிமொழியாக வழங்கி, உரிமம் பெற்ற பின்னர்தான் டேங்கர் லாரி இயக்கப்படுகிறது.

சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மினி டேங்கர் லாரிகளில் இவ்வாறு ஆபத்தான முறையில் எரிபொருள் எடுத்துச் சென்று விற்கப்படுகிறது. இவ்வாறு எடுத்துச் செல்லும்போது விபத்து ஏற்படலாம். இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும். பள்ளிகளுக்கு இதுபோன்ற மினி டேங்கர்களில் எடுத்துச் சென்று பள்ளி வாகனங்களுக்கு அதன் வளாகங்களிலேயே பெட்ரோல், டீசலை நிரப்புகின்றனர். இதுபோன்ற இடங்களில் விபத்து ஏற்பட்டால் நிலைமை என்ன ஆகும். ஆனால் அதுகுறித்த எந்த உணர்வும் இல்லாமல் லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். இதேபோல, ஆம்னி பஸ்கள் நிற்கும் இடங்களுக்கே சென்று டீசல் நிரப்பப்படுகிறது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இப்பகுதியில் திடீரென விபத்து ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே இதுபோன்று முறைகேடாக பெட்ரோல், டீசல்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, வணிக வரித்துறை ஏன் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் அதிகாரிகள், ஆயில் கம்பெனிகள்   மற்றும் வெடி மருந்து கட்டுப்பாட்டு துறை  இணைந்தோ, அல்லது தனியாகவோ விபத்துகள் ஏற்படுவதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர் .

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி, செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் மணிமாறன் ஆகியோர் கூறியதாவது: எங்கள் சங்க உறுப்பினர்களை பொறுத்தவரை பெட்ரோல் பங்குகளில்தான் நாங்கள் விற்பனை செய்கிறோம். நாங்கள் மொத்த விற்பனையில் ஈடுபடுவதில்லை. ஒவ்வொரு வாகனத்திலும் பெட்ரோல் நிரப்புவதற்கு டேங்குகள் உள்ளன. அந்த டேங்குகளில்தான் பெட்ரோல் / டீசல் நிரப்புகிறோம். விவசாயத்திற்கு மற்றும் ஜெனரேட்டருக்கும் அரசு விதிகளுக்குட்பட்டு கேன்களில்  நிரப்புகிறோம். எங்களைப் பொறுத்தவரை எந்த முறைகேடும் நடக்க இடமளிக்க மாட்டோம். வழி ஏற்படுத்தியும் கொடுக்க மாட்டோம்.  தற்போது 12000 லிட்டர் முதல் 24000 லிட்டர் வரையிலான கொள்ளளவு உள்ள டேங்கர் லாரிகளுக்கு அரசு அனுமதி உள்ளது. தற்சமயம் தமிழகம் தழுவிய வகையில் நூற்றுக்கு மேற்பட்ட 2000 லி முதல் 8000 லி வரையிலான சிறிய ரக வாகனங்களில்  நிரப்பி தங்களின் விற்பனை நிலையங்களில் இருந்து 100 கி மீ தூரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

மேற்படி வாகனங்களுக்கு பெட்ரோலிய பொருட்களை எடுத்து செல்லும் உரிமம் இல்லை. மேலும் தமிழக அரசின் போக்குவரத்து துறையால் வழங்கப்படும் பெட்ரோலிய பொருட்கள் எடுத்து செல்லும் பெர்மிட் இல்லை. வண்டிகளில் டீசல் விநியோகிக்கப்படும் அளவீட்டுக்கருவிக்கு எடை அளவு அதிகாரிகளிடம் அனுமதியில்லை.   எந்த டேங்கர் லாரிகளிலும் சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து நேரடியாக நிரப்பக்கூடாது என்பது எண்ணை நிறுவனங்களின் விதிமுறை ஆகும். இதை மீறுபவர்கள் மீது எண்ணை நிறுவனங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என அறிவுறுத்தியுள்ளது. எனவே இதுபோன்று சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்டு வரும் வாகனங்களை எண்ணை நிறுவனங்களும் அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளைர்கள் சங்கம் வேண்டுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: