திமுக இளைஞரணியின் இலக்கு என்பது தமிழகத்தில் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது தான்: 40வது ஆண்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் சூளுரை

சென்னை: திமுக இளைஞரணியின் இலக்கு என்பது தமிழகத்தில் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது தான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 1980ம் ஆண்டு ஜூலை 20ம் நாள், மதுரை ஜான்சி ராணி பூங்கா திடலில் திமுக இளைஞரணியை முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்தார். இயக்கத்தின் இதயமாக சொல்லப்படும் இளைஞரணி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாற்பதாவது ஆண்டை இளைஞரணி தொடும்போது, அதனுடைய செயலாளர் பொறுப்பை சுமக்கும் கடமை, எனக்குக் கிடைத்திருப்பதை நினைத்து, ஒரு பக்கம் பெருமைப்படுகிறேன். இன்னொரு பக்கம் மலைப்பாகவும் இருக்கிறது. பெருமைக்கு என்ன காரணம் என்பதை நான் சொல்லத் தெரியவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருந்து செயல்பட்ட பொறுப்பு இது. இதைவிட பெருமை எனக்கு என்ன வேண்டும்?

 ஏன் மலைப்பாக இருக்கிறது என்றேனென்றால், கடந்த 40 ஆண்டு காலமாக இளைஞரணியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை செதுக்கி, அசைக்க முடியாத கற்கோட்டையாக உருவாக்கிக் கொடுத்துள்ளார். அதனை மேலும் கட்டிக்காக்கும் பொறுப்பு, என் கையில் வந்து சேர்ந்துள்ளது. திமுக என்ற இயக்கமே, இளைஞர்களுக்காக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான். 1949ம் ஆண்டு திமுக தொடங்கப்பட்டபோது, அண்ணா வயது 40. முத்தமிழறிஞர் கலைஞரின் வயது 25. பொதுச்செயலாளர் பேராசிரியருக்கு  அப்போது வயது 27. இப்படி ஒவ்வொரு முன்னணியினரையும் வரிசைப்படுத்த முடியும். அதனால் தான், இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இளைஞர் இயக்கம் என்கிறேன். இந்த இளைஞர் சக்தி தான், கொட்டும் மழையில் உருவான இயக்கத்தை நாடு முழுவதும் வளர்த்து அசைக்க முடியாத ஆலமரமாக காட்சியளிக்க வைத்துள்ளது. இயக்கத்தின் வேர் ஆழமானது. கிளைகள் விரிந்து பரந்தது. யாராலும் எளிதில் அசைக்க முடியாதது. அதனால் தான், இன்று பலருக்கும் திமுகவை பார்த்தால், வயிற்றெரிச்சல்.

 பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள் என்பவை உரம் போன்றவை. மனதை திடப்படுத்துபவை. இந்த விமர்சனங்களுக்கான ஒரே பதில் ‘’செயல்’’ மட்டுமே என்று மு.க.ஸ்டாலின் அடிக்கடி சொல்வார். அந்த அடிப்படையில் எங்களது இளைஞரணி தனது அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டின் மூலமாக இந்த விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கிச் செல்வோம்.   நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞரணிக்கு இலக்கு என்பது ஒன்று தான். தமிழ்நாட்டில் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது. அந்த இலக்கை அடைய இரவுபகல் பாராது உழைக்க கிளம்பியிருக்கும் இளம்படையினருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: