அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களை வரவேண்டாம் என்று சொல்ல கலெக்டருக்கு யார் அதிகாரம் கொடுத்தது: பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

சென்னை: அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களை வரவேண்டாம் என  சொல்வதற்கு காஞ்சிபுரம் கலெக்டருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை வியாசர்பாடியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை  மக்களுக்கு  தரிசனம் கொடுக்கும் அத்தி வரதரை தரிசக்க லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். ஆனால்  மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சாதாரண தேர் திருவிழாவில் உள்ள ஏற்பாடுகள் கூட அத்திவரதர் கோயிலில் செய்யவில்லை. அமைச்சர் யாரும் கோயிலுக்கு சென்று பார்வையிடவில்லை. இதனால்  முதல்வர் சில அமைச்சர்களை அங்கு அனுப்பி வைத்து உடனடியாக  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அத்தி வரதரை தரிசித்து அருள்  பெறவேண்டும் என வந்திருப்பது நாம் பார்க்க முடிகிறது. அரசியல் கட்சிகளை சேர்ந்த குடும்பங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அங்கு சென்று தரிசித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக  அங்கு நடந்து கொண்டிருக்கும் துயர சம்பவங்கள் வேதனையான ஒன்று. கூட்ட நெரிசல் காரணமாக கோயிலுக்கு கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் வர வேண்டாம் என்று  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளம்பரம் கொடுக்கிறார். பக்தர்களை வரவேண்டாம் எனறு சொல்லும் அளவுக்கு அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார், உடனே அவர் அந்த விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும். இது தமிழகத்திற்கு தலைக்குனிவு.  மேலும் பக்தர்களுக்கு உடனடியாக குடிநீர் வசதி, உணவு ஏற்பாடுகள் ஆகிய அத்தனை வசதிகளையும்  செய்து  கொடுக்க வேண்டும். வேண்டுமென்றால்  திருப்பதி நிர்வாகிகளை கூட கொண்டு வந்து ஏற்பாடுகள் செய்யலாம் என்றார்.

Related Stories: