×

விருந்தினர் மாளிகைக்கு வந்து சந்தித்தனர் துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு பிரியங்கா ஆறுதல்: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விடிய விடிய தர்ணா

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நிலத் தகராறில் சுட்டுக் கொல்லப்பட்ட பழங்குடியின மக்களின் குடும்பத்தினர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவை  விருந்தினர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு பிரியங்கா ஆறுதல் கூறினார். பின்னர், போராட்டத்தை கைவிட்டு அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.  உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் கடந்த 17ம் தேதி பழங்குடியின விவசாயிகளை அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. நிலத்தில் இருந்து வெளியேற மறுத்த பழங்குடி மக்களை, உப்பா கிராம தலைவர் யாக்யா தத்தின் ஆதரவாளர்கள் சரமாரியாக சுட்டதில் 10 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயம் அடைந்தனர்.  காயமடைந்து வாரணாசி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த புதன்கிழமை சந்தித்து ஆறுதல்  கூறினார்.

பின்னர், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நேற்று முன்தினம் சோன்பத்ரா சென்ற அவரை, உத்தரபிரதேச போலீசார் மிர்சாபூரில் தடுத்தனர். இதை எதிர்த்து சாலையில் அமர்ந்து தர்ணா செய்த அவரை, போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர், சுனார் விருந்தினர் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அப்போது, பிரியங்காவை டெல்லிக்கு திரும்பி செல்லும்படி மாவட்ட அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் போக மாட்டேன் என அவர் உறுதியாக கூறி விட்டார். அவருக்கு மின்சார வசதி மற்றும் உணவு வசதி செய்து தரப்படாததால், மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே ஆதரவாளர்களுடன் விடிய விடிய தர்ணாவை தொடர்ந்தார். நள்ளிரவில் அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்காவிட்டால் சிறை செல்லவும் தயார்,’ என அறிவித்தார்.தொடர்ந்து, வாரணாசி ஏடிஜி பிரிஜ்பூஷன், வாரணாசி போலீஸ் கமிஷனர் தீபக் அகர்வாலை அனுப்பி வைத்து பிரியங்காவை மீண்டும் உத்தர பிரதேச அரசு எச்சரித்தது.

பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் திரும்பி செல்லவும் அறிவுறுத்தினர். பின்னர், பிரியங்கா வெளியிட்ட டிவிட்டரில், `நான் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்க்கவே இங்கே வந்துள்ளேன். சட்ட மீறலில் ஈடுபடவில்லை. நான் எதற்காக கைது செய்யப்பட்டேன் என்பதற்கான எந்த ஆவணங்களையும் ஒருமணி நேரம் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் காட்டவில்லை. இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரை துடைக்க வந்தது குற்றமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில், பிரியங்காவுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் இரவு முதல் காங்கிரசார் லக்னோவின் ஜிபிஓ பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் அஞ்சு அவஸ்தி கூறுகையில், ‘‘விருந்தினர் மாளிகையில் உள்ள பிரியங்காவை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்கும் வரை, நாங்கள் தர்ணாவில் ஈடுபடுவோம்,’’ என்றார்

இதையடுத்து, நேற்று காலை பிரியங்காவை சந்திக்க விருந்தினர் மாளிகைக்கு வந்த சோன்பத்ரா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 15 பேரை விடுதி வாசலில் போலீசார் தடுத்தனர். பின்னர், சிலரை மட்டுமே பிரியங்காவை சந்திக்க அனுமதித்தனர். இது தொடர்பாக பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில், ‘‘துயரத்தில் இருந்த 15 பேர் என்னை சந்திக்க வந்திருந்தனர். அவர்களில் சிலர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அப்போது போலீசாரிடம் அவர்களை என்னை சந்திக்க அனுமதியுங்கள் என கேட்டும் பலரை தடுத்துவிட்டனர். சந்தித்த சிலர் என்னிடம் அவர்களது துயரங்களை பகிர்ந்து ெகாண்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி தண்ணீர் கொடுத்தேன்,’’ மீண்டும் இங்கு வருவேன் என்றார்.இதைத் தொடர்ந்து, பிரியங்கா தனது போராட்டத்தை கைவிட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, வாரணாசியில் காசி விஸ்வநாதர் மற்றும் காலபைரவர் சென்று கோயில்களில் தரிசனம் செய்தார்.

ஜனநாயக அவமதிப்பு :
பிரியங்கா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேஸ்புக்கில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘சோன்பத்ராவில் பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளார். சுனார்  விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ள அவருக்கு தண்ணீர், மின்வசதி செய்து தராமல் சர்வாதிகார போக்குடன் உத்தர பிரதேச அரசு செயல்பட்டுள்ளது. இது, ஜனநாயகத்தை காலால் மிதிக்கும் செயல்,’ என தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட்  குற்றச்சாட்டு:
பழங்குடியினர் கொல்லப்பட்ட உபா கிராமத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  தலைவர்கள் குழு நேற்று சென்று, பாதிக்கப்பட்ட பழங்குடியினரை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘70 ஆண்டுகளுக்கும் மேலாக உபா கிராமத்தில் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். எந்தவொரு அரசும் அவர்களுக்கு பட்டா அளிக்கவில்லை. யோகி ஆதித்யநாத் அரசு பதவியேற்றதும், இந்த நிலங்களை அபகரிக்க முயல்கின்றனர். நில மாபியாக்களை பாதுகாக்கவே யோகி அரசு முயற்சிக்கிறது. இது வன்மையாக கண்டித்தக்கது. பல ஆண்டுகளாக அங்கு விவசாயம் செய்து வரும் பழங்குடியின மக்களுக்கு அந்த நிலத்தை பட்டா போட்டு கொடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

‘மீண்டும் வருவேன்’:
சுட்டுக் கொல்லப்பட்ட பழங்குடியின மக்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பிறகு, அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்களிடம் பிரியங்கா பேசுகையில், ‘‘என்னை கைது செய்ய சொன்னவர்கள் இப்போது விடுதலை செய்து விட்டனர். என்னுடைய கோரிக்கைகள் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை சந்தித்து விட்டேன். நான் இன்று புறப்பட்டு செல்கிறேன். ஆனால், மீண்டும் திரும்பி வருவேன்,’’ என்றார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு:
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், `உபி.  மக்களின் வாழ்க்கைக்கும், சொத்துகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பெயரில், தன் மீதான தவறுகளை மறைக்க 144 தடை உத்தரவை அரசு அமல்படுத்தி உள்ளது. அதனால்தான், யாரும் சோன்பத்ரா செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.  பழங்குடியினர் மீதான வன்முறைகளும், அவர்களின் நில உரிமையை பறிப்பது போன்றவை பாஜ அரசில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதற்கு சான்றாகிறது,’ என்று கூறியுள்ளார்.



Tags : Guest House, Darna,Priyanka
× RELATED மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...