×

டெல்லியில் 15 ஆண்டு முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் மறைவு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் 1998ம் ஆண்டு தொடங்கி 2013ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை முதல்வராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். அவருக்கு வயது 81. உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஒக்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அவரை சேர்த்தனர். அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தது. அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை சீரடையத் தொடங்கியது. எனினும், மதியம் மறுபடியும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து, டாக்டர்கள் தீவிரமாக முயற்சித்தும் பலனின்றி மதியம் 3.55 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

டெல்லியின் இரும்பு பெண்மணி என்று ேபாற்றப்பட்ட ஷீலாவின் மரணம் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஷீலா தீட்சித்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் நிஜாமுதீனில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்களும், கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் குவிந்தனர். மாநிலத்தில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என துணை முதல்வர் சிசோடியா கூறியுள்ளார். அனைவரும் அஞ்சலி செலுத்துவதற்காக ஷீலா தீட்சித்தின் உடல் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு  இன்று கொண்டு வரப்படும் எனவும், பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக  எடுத்து செல்லப்பட்டது இறுதி என்றும் காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஜி முதல்வர் ஷீலாவின் மரணம் டெல்லிவாசிகளை பலத்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தலைநகரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடியது. ஷீலாவின் மரணத்தை முன்னிட்டு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. போலீசாரும் தேவையான அளவுக்கு ஆங்காங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். அரசு மரியாதையுடன் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Tags : Delhi, Sheila Dixit, late
× RELATED டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது