பஞ்சாப் அமைச்சர் சித்து ராஜினாமாவை அம்ரீந்தர் சிங் ஏற்றார்

சண்டிகர்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் அம்ரீந்தர் ஏற்றுக்கொண்டார்.  பாஜ.வில் இருந்து விலகிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, கடந்த 2017ம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கு சற்று முன்னதாக காங்கிரசில் இணைந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றதை தொடர்ந்து, அம்ரீந்தர் சிங் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. இதில், சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சராக சித்து பொறுப்பேற்றார்.  இந்நிலையில், சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக முதல்வர் அம்ரீந்தருடன் சித்துவுக்கு மோதல் ஏற்பட்டது.  இருவரும் வெளிப்படையாக விமர்சனங்களை பகிர்ந்து கொண்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜூன் 6ம் தேதி பஞ்சாப் அமைச்சரவையை அம்ரீந்தர் மாற்றி அமைத்தார். அப்போது, சித்துவின் இலாகா மாற்றப்பட்டது. அவருக்கு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை கொடுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த சித்து, புதிய பொறுப்பை ஏற்காமல் இருந்து வந்தார். கடந்த மாதம் 10ம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கடந்த 14ம் தேதி டிவிட்டரில் சித்து திடீரென அறிவித்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுலையும் சித்து கடந்த மாதம் 9ம் தேதி சந்தித்து தெரிவித்தார். தொடர்ந்து, கடந்த 15ம் தேதி சித்து தனது ராஜினாமா கடிதத்தை சண்டிகரில் உள்ள முதல்வர் அம்ரீந்தரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு அனுப்பினார். அப்போது அவர் டெல்லியில் இருந்ததால் சண்டிகர் திரும்பியதும் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, கடந்த 17ம் ேததி பஞ்சாப்  திரும்பிய அம்ரீந்தர், நேற்று சித்துவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அந்த கடிதத்தை கவர்னர் சிங் பட்னோருக்கும் அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில், தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஒரே வரியில் சித்து குறிப்பிட்டிருந்தார். ராஜினாமாவுக்கான காரணம் அல்லது விளக்கம் எதையும் தெரிவிக்கவில்லை.

Related Stories: