திருவொற்றியூரில் பொதுக்குழாய் திறப்பு நிகழ்ச்சியின் போது குடிநீர் வராததை கண்டித்து மக்கள் சாலை மறியல்: விழாவை பாதியில் ரத்து செய்துவிட்டு அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓட்டம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 6வது வார்டுக்கு உட்பட்ட காட்டு பொன்னியம்மன் நகர் மற்றும் முருகப்பா நகர் ஆகிய பகுதிகளில் பொது குழாய்கள் இல்லாததால், பொதுமக்கள் வெகு தூரம் நடந்து சென்று குடிநீர் பிடிக்க வேண்டிய நிலை  இருந்தது.   இதனால், தங்களது பகுதியில் பொது குழாய்கள் அமைக்க வேண்டும் என்று குடிநீர் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், மேற்கண்ட 2 பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன் பொது குழாய்கள் அமைக்கப்பட்டன. இதில், குடிநீர் வழங்கும் துவக்க விழா நேற்று காலை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  இதற்காக அதிமுக சார்பில் பேனர்கள் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு முன்னாள் எம்எல்ஏ குப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொது குழாய்களை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்க பொன்னியம்மன் நகருக்கு வந்தனர். அப்போது, பொதுமக்கள் காலி குடங்களுடன் புதிதாக பொருத்தப்பட்ட குழாயில் குடிநீர் பிடிப்பதற்காக காத்திருந்தனர்.

 7.40 மணிக்கு முன்னாள் எம்எல்ஏ குப்பன் பொது குழாயை திறந்தபோது  அதில் தண்ணீர் வரவில்லை. அதற்கு பதில் காற்றுதான் வந்தது. இதனால், அங்கிருந்த பெண்கள்  முகம் சுழிக்க ஆரம்பித்தனர். உடனடியாக இதுபற்றி குடிநீர் வாரிய பகுதி பொறியாளருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், வெகு நேரமாகியும் குடிநீர் வரவில்லை.  இதனால் குடிநீர் பிடிக்க காத்திருந்த பெண்கள் ஆத்திரமடைந்து ஏன் குழாயில் குடிநீர் வரவில்லை என்று கேட்டு முன்னாள் எம்எல்ஏ குப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விழாவை நடத்தாமல் குப்பன் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.  இதையடுத்து அங்கிருந்த பெண்கள் குடிநீர் வழங்காத குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளை கண்டித்து பொன்னியம்மன் மேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சாத்தாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இதுகுறித்து குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,     ‘‘வாரத்திற்கு மூன்று நாள் காலை 6.50 மணிக்கு தொடங்கி 50 நிமிடம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதன்படி இன்றும் (நேற்று) குடிநீர் வினியோகித்து விட்டோம். ஆனால் புதிதாக பொது குழாய் அமைத்த இடத்தில் குடிநீர் வரவில்லை என்று தெரிவிக்கின்றனர். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: