சட்ட விரோதமாக 2வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்களுக்கான தண்டனை குறித்து விழிப்புணர்வு தர வேண்டும்: சட்ட கமிஷனுக்கு தகவல் ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை: முதல் மனைவி இருக்கும்போது சட்ட விரோதமாக 2வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்களுக்கான தண்டனை குறித்து இணைய தளத்தில் விளக்கம் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டக் கமிஷனுக்கு மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகஜோதி. இவருக்கும் சென்னை குடிநீர் வழங்கல் துறையில் மேலாளராக பணியாற்றும் நபருக்கும் கடந்த 1998ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நாகஜோதியிடம் விவாகரத்து பெறாமல் அவரது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.

இதையடுத்து கணவர் மீது புகார் கொடுத்த நாகஜோதி தனக்கும் குழந்தைக்கும் ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே, தனது கணவரின் பணிக்கால பலன் மீதான வாரிசு, அவரது பணி நிலவரம் உள்ளிட்ட தகவல்களை கேட்டு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்திற்கு மனு அனுப்பினார். அதற்கான பதில் அவருக்கு வாரியத்தால் அனுப்பப்பட்டது. ஆனால், கணவருக்கான தண்டனை குறித்து எந்த தகவலும் இல்லை.

இதையடுத்து அவர் மாநில தகவல் ஆணையத்தில் முறையிட்டார். இந்த மனுவை மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் விசாரித்து அளித்த உத்தரவு வருமாறு:

சட்ட பூர்வமான துணை இருக்கும்போது கணவன் வேறு ஒரு பெண்ணையோ, மனைவி வேறு ஒரு ஆணையோ திருமணம் செய்வது இருதாரமணமாகும். இந்த தவறுக்கு இந்திய தண்டனை சட்டத்தில் 7 ஆண்டுகள்வரை சிறை தண்டனை உண்டு.இது தொடர்பான விழிப்புணர்வும் மக்களிடம் இல்லை. குறிப்பாக அரசு ஊழியர்கள் மனைவி இருக்கும்போது 2ம் திருமணம் செய்தால் என்ன தண்டனை என்பது குறித்தும் விழிப்புணர்வு இல்லை.

இதுபோன்ற சட்ட விரோத திருமணங்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். தாய், தந்தை இருவரிடமும் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்படும். இது தொடர்பான விழிப்புணர்வு அவசியம் என்று இந்த ஆணையம் முடிவுசெய்துள்ளது. எனவே, சட்ட விரோத திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை இந்திய சட்டத்தில் உள்ளது என்பது குறித்து மக்களுக்கு தமிழ்நாடு சட்டக் கமிஷன் தெளிவுபடுத்த வேண்டும். இது தொடர்பான தகவல்களை சட்டக் கமிஷன் தனது இணைய தளத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: