பல்வேறு ஓய்வூதிய திட்டங்களில் பயன் பெற்று வந்த 8,246 பேர் ஒரே ஆண்டில் நீக்கம்: கொள்கை விளக்க குறிப்பின் மூலம் அம்பலம்

சென்னை: பல்வேறு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன் பெற்று வந்த பயனாளிகளில் ஒரே ஆண்டில் 8,246 பேர் நீக்கப்பட்டு இருப்பது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பின் மூலம் அம்பலமாகியுள்ளது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஏழை விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், 50 வயைத கடந்த ஆதரவற்ற மற்றும் திருமணமாகாத ஏழை பெண்கள் ஆகியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

தற்போது அனைவருக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் மாதாந்திர ஓய்வூதிய தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இத்திட்டத்தில் பயன் பெற்ற வந்தவர்கள் பலரது பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, கடந்த 8 ஆண்டுகளில் லட்சக்கணக்கானோர் பெயரை நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சட்டசபையில் வருவாய்த்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் உதயக்குமார் தாக்கல் செய்ய கொள்கை விளக்க குறிப்பில், கடந்த 31.03.2019அன்று வரை 29.50 லட்சம் பயனாளிகள் இத்திட்டங்களின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நடப்பாண்டில் 2019-2020ல் ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ.4060.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுஎன்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2018-19ல் பல்வேறு ஓய்வூதிய திட்டங்களில் பயனடைந்து வந்தவர்களில் 2019-2020ல் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கடந்த 2018-19ல் 12,60,876 பேர் இருந்த நிலையில் கடந்த 2019-20ல் 12,57,478 பேர் ஆகவும், முதல்வரின் உழவர் பதுகாப்பு திட்டத்தில் கடந்த 2018-19ல் 2,93,124 பேர் இருந்த நிலையில் 2019-20ல் 2,88,596 ஆகவும், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டத்தில் கடந்த 2017-18ல் 1,11,406 பேர் இருந்த நிலையில் 2019-2020ல் 1,11,086 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு திட்டங்களின் கீழ் ஒரே ஆண்டில் 8,246 பேர் நீக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: