நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ தலைமையில் ஆக. 8 முதல் மூன்று நாட்கள் விழிப்புணர்வு பயணம்: மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை:  நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ தலைமையில் ஆகஸ்ட் 8 முதல் 3 நாட்கள் விழிப்புணர்வு பயணம் நடத்துவது என்று மதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுக உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 111வது பிறந்தநாள் விழா மாநாட்டை செப்டம்பர் 15ம் தேதி அன்று தலைநகர் சென்னையில் மிகவும் சிறப்பாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்திற்கு கம்பீரமாகச் செல்லும்  பொதுச் செயலாளர் வைகோவுக்கு மதிமுவின் லட்சக்கணக்கான தொண்டர்களின் சார்பில் இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்து பெருமை கொள்கிறது. தற்போது மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கி உள்ள தடை ஆணை மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு இவற்றை அலட்சியப்படுத்தி விட்டு நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளது.

எனவே, பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தவாறு மீண்டும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் ஆகஸ்ட் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்கள் வைகோ தலைமையில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது. வைகோவின் நியூட்ரினோ எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தரராஜன், நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் நிர்வாகிகளான லெனின் ராசப்பா, திருமுருகன் காந்தி, ஈரோடு கி.வே.பொன்ன்னையன் மதிமுக தேனி மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.

கூடங்குளம் அணுஉலைகளின் வளாகத்தில் அணுக்கழிவு மையத்தை அமைப்பதை எதிர்த்து ஆகஸ்ட் 13ம் தேதி கட்சி பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், பூவுலக நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராசன் முன்னிலையில் எழும்பூரில் கருத்தரங்கம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

Related Stories: