டாஸ்மாக்கில் 500 இளநிலை உதவியாளர் தேர்வு எழுதுபவர்களில் 388 பேர் மீது கிரிமினல் வழக்கு

* 2,500 பேர் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள்  

* அதிகாரிகளின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

சென்னை: டாஸ்மாக்கில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை எழுதுபவர்களில் 388 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதும், 2 ஆயிரத்து 500 பேர் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரத்து 152 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 26 ஆயிரத்து 56 ஊழியர்கள் பல்வேறு பணிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி 500 பேருக்கு டாஸ்மாக் நிர்வாகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்க திட்டமிட்டது.

அதன்படி, இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்வுக்கு தடை விதித்து தடை விதித்தது. பின்னர், நடந்த விசாரணையில் தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. பின்னர், இதை மாற்றி ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 9 மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது.

இந்தநிலையில், இத்தேர்விற்கு டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் உள்ள 37 மாவட்டங்களில் 10 ஆயிரத்து 404 பேர் விண்ணப்பித்தனர். இதில், 8 ஆயிரத்து 464 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1,940 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட 8 ஆயிரத்து 464 பேரில் 5 ஆயிரம் பேர் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கிரிமினல் நடவடிக்கைக்கு ஆளானவர்கள் என குற்றம்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டையடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை மறுஆய்வு செய்ய 10 அதிகாரிகளை நிர்வாகம் நியமித்தது. இவர்கள் தேர்வர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது, அனைவரது விண்ணப்பங்களையும் சரிசெய்து இறுதி அறிக்கையை குறிப்பிட்ட அதிகாரிகள் நிர்வாகத்தில் சமர்பித்துள்ளனர்.

அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 388 பேர் மீது பல்வேறு கிரிமினல் வழக்கு உள்ளதும், 2 ஆயிரத்து 500 பேர் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 700க்கும் மேற்பட்டோர் மதுபானங்களில் தண்ணீர் கலந்ததும், 500க்கும் மேற்பட்டோர் தவறாக கணக்கு சமர்ப்பித்ததும் தெரியவந்தது. எனவே, தேர்வு எழுதுபவர்களில் மொத்தமாக 5 ஆயிரம் பேர் மீது பல்வேறு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் என்பது அந்த அறிக்கையின் படி தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் 18ம் தேதி 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வு எழுதும் 5 ஆயிரம் பேர் கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் என்பது தேர்வர்கள் மத்தியிலும், டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். கிரிமினல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளவர்கள் தேர்வு எழுந்தலாமா என்பது குறித்தும் நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.

இதை கருத்தில்கொள்ளாமல் திட்டமிட்டப்படி தேர்வு நடத்தினால் இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் மதுபானங்களில் தண்ணீர் கலந்ததும், 500க்கும் மேற்பட்டோர் தவறாக கணக்கு சமர்பித்ததும் தெரியவந்தது.

Related Stories: