உளவுத்துறை போலீசாரை லாரி ஏற்றி கொல்ல சொன்ன விவகாரம் கடலூர் எஸ்.பி., இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை:  உளவுத்துறை போலீசாரை லாரி ஏற்றி கொல்ல சொன்ன விவகாரத்தில் கடலூர் எஸ்.பி., விசாரணை செய்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திட்டக்குடி காவல் கோட்டம் ராமநத்தம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கல்லூர் என்ற கிராமத்தில் பொன் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கு பாறைகளை உடைப்பதற்கு ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதற்காக ஏராளமான அளவில் வெடிபொருட்கள் சாதாரண  கீத்துக் கொட்டகையில் பாதுகாப்பற்ற முறையில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து தகவல் அறிந்து, விழுப்புரம் ஓசிஐசி இன்ஸ்பெக்டர் ஜெரால்டு, திட்டக்குடி ஓசிஐசி போலீஸ்காரர் ராஜசேகர் கல்குவாரியில் சோதனை நடத்திய போது அங்கு பாதுகாப்பற்ற முறையில் ஜெலட்டின் குச்சிகள், வெடிபொருட்கள் இருப்பதை பார்த்து அதை படம் பிடித்தபோது கல்குவாரியின் மேனேஜர் மணி என்பவர் ஓடிவந்து, ‘‘நீங்கள் யார், நாங்கள்தான் ராமநத்தம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் உளவுத்துறையை சேர்ந்த தண்டபாணி ஆகியோருக்கு மாமூல் கொடுக்கிறோமே, நீங்க வேற புதுசா வந்திருக்கீங்க’’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர் சத்தம் போட்டுள்ளார். அப்போது ஏட்டு தண்டபாணி அவரை தனியாக அழைத்து சென்று மிரட்டியுள்ளார். மேனேஜரை அழைத்து உளவுத்துறை, அந்த துறை என்று யார் வந்தாலும் லாரியை ஏற்றி கொன்றுவிட்டு அப்புறம் என்னிடம் தகவல் சொல்லு என்று கூறியுள்ளார். அப்போது உளவுத்துறையை சேர்ந்த போலீஸ்காரர் ராஜசேகரை அழைத்து, நீ வந்து பிடித்தால் முதலில் என்னிடம் தானே சொல்ல வேண்டும்.

அதை விட்டு யாரிடமோ சொல்லியிருக்கிறாய் என்று கூறி இப்போது நீதான் அவரிடம் பணம் கேட்டாய், அவர் தர மறுத்ததால் அவரை மாட்டி விடுகிறாய் என்று மேனேஜரிடம் புகார் வாங்கி உன் சட்டைய கழற்றுகிறேன் பார் என்று மிரட்யுள்ளார். அப்போது, பத்திரிகையாளர்கள் அங்கு வரவே அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இந்நிலையில், இந்த செய்தி கடந்த மாதம் பத்திரிகையில் வெளிவந்தையடுத்து அதை படித்து பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து கடலூர் எஸ்.பி 2 வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: