உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தும் மின் கட்டணத்தில் தொடரும் குளறுபடி? வாரிய அதிகாரிகள் விசாரிக்க கோரிக்கை

சென்னை: உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தும் மின் கட்டணத்தில், பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் தொடர்ந்து நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மின்வாரியத்திற்கு பெருந்தொகை நஷ்டமாவதாக கூறப்படுகிறது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏராளமான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தை, தமிழக மின்சார வாரியம் விநியோகித்து வருகிறது. அதற்கு விதிகளின்படி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அந்தவகையில் உள்ளாட்சி அமைப்புகளான ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கும் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

இங்கு, தெருவிளக்குகள், ஆழ்துளை கிணறுகள், மேல்நிலை தொட்டிகள் என பல்வேறு வழிகளில் செலவு செய்யப்படும் மின்சாரத்திற்குறிய கட்டணம் ஆணையாளர் பெயரில் மின்வாரியத்துக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தப்படும். இவை பெரும்பாலும் ரொக்கமாக வழங்காமல், காசோலையாகவே வழங்கப்படுகிறது. இவ்வாறு செலுத்தப்படும் காசோலையை திரும்ப பணமாக்கும்போது, பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.  

இதுகுறித்து தொமுச நிர்வாகி சரவணன் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகள் பணம் செலுத்துவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊராட்சி, பேரூராட்சி நகராட்சி, மாநகராட்சி சார்பில் பயன்படுத்தப்படும் மின்சாரம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, செலுத்த வேண்டிய தொகை குறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து விடுவார்கள்.

அதன்பிறகு உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வசம் உள்ள மின் இணைப்புகளுக்கு உரிய கட்டண தொகையை வங்கி காசோலையாக மொத்தமாக கொடுத்து, மின் இணைப்புகளின் எண்களையும் மின்வாரியத்திடம் கொடுத்து விடுவார்கள்.

பிறகு அந்தக்காசோலையை பணமாக்குவதிலும், முறையாக வாரியத்திற்கு செலுத்துவதிலும் பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் நடக்கின்றன. இந்த முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டு, மின்வாரியத்தில் அவ்வப்போது பல இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிறகு கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி வேறு அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். அப்போது அங்குள்ள அதிகாரிகள் தாங்கள் கட்டணத்தை செலுத்தி விட்டதாக கூறுகின்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

ஆனால் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை கண் துடைப்புக்காக எடுக்கப்பட்டதோடு, இந்த பிரச்சினையை மூடி மறைக்கவும் முயற்சி நடக்கிறது. இத்தகைய முறைகேடு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் நடைபெறுகிறதா? அல்லது தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி  மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தும் பணத்திலும் நடக்கிறதா? என்பதை மின்வாரியம் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் மின்வாரிய லஞ்ச ஒழிப்பு துறை இந்த ஊழல் குறித்து நேரில் விசாரணை நடத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளும் தங்களது மின்இணைப்புகளுக்கு சரியாக பணம் செலுத்தப்பட்டு உள்ளதா? என்பதை தனியாக ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக தொமுச சார்பில் மின்வாரிய லஞ்ச ஒழிப்பு துறைக்கு விரைவில் புகார் மனு அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: