போலீஸ் சேனல்: ஆளை விடுங்கடா சாமீ...!

திருப்பூர் மாநகரில் 8 காவல்நிலையங்கள் உள்ளன. இதன் எல்லைக்குள் நாள்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, செயின் பறிப்பு என ஏதாவது குற்றச்செயல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. காவலர் எண்ணிக்கை போதுமான அளவு இல்லாத காரணத்தால், இவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. சுமார் 70 போலீசார் பணியாற்ற வேண்டிய ஒரு காவல்நிலையத்தில் 20 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால், குற்றத்தடுப்பில் திருப்பூர் மாநகர போலீஸ் கடைசி இடத்தில் உள்ளது.

இங்குள்ள காவல் நிலையங்களில் பணியில் இருக்கும் போலீசாருக்கு விடுமுறை கிடைப்பதும் குதிரைக்கொம்பாக உள்ளது. அதனால், மன உளைச்சலில் தவிக்கும் இவர்கள், வெளிமாவட்டங்களுக்கு டிரான்ஸ்பர் கேட்டு எப்போ தப்பிக்கலாம் என காத்திருக்கின்றனர். வேலைப்பளு அதிகமாக உள்ளதால், டாஸ்மாக் ‘’பார்’’களுக்கு செல்வது, வாகன தணிக்கை நடத்தி, காசு பார்ப்பது என ஆறுதல் தேடிக்கொள்கின்றனர். இப்படி வாகன தணிக்கை செய்தபோதுதான் சமீபத்தில் ஒரு காவலர், பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார். விவகாரம், சட்டை கிழிப்பு வரை சென்றது. அதனால், திருப்பூர் காவல்நிலையத்தில் பணி... என்றாலே, ஆளைவிடுங்கடா சாமீ... என போலீசார் ஓட்டம் எடுக்கின்றனர்.

 

* கேஸ் பிடித்ததால் டோஸ்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா, போதை ஊசி விற்பனை அதிகரித்து உள்ளது. இதனால் ரோந்து பணிக்கு செல்லக்கூடிய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி. ஸ்ரீ நாத் உத்தரவிட்டு இருக்கிறார். ஆனால் சில காவல் நிலையங்களில் திருட்டு மது, கஞ்சா, போதை ஊசிகள், சீட்டு விளையாட்டு இப்படி ஏதாவது கேஸ் பிடிச்சிட்டு வந்தா இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்களையும், எஸ்.எஸ்.ஐ.க்களையும் கடுமையாக திட்டுகிறார்களாம். உங்களுக்கு எதற்கு வம்பு வேலை.

நீங்க பேசாமல் ஏதாவது பிடிச்சிட்டு வந்துடுறீங்க. வழக்கு பதிவு பண்ணி, கோர்ட் வரைக்கும் யார் அலைகிறது. தேவையில்லாத வேலை பார்க்காதீங்க. போதை ஊசி, கஞ்சா விற்கிறவனை பற்றி நீங்க ஏன் கவலைப்படுறீங்க? உயர் அதிகாரிகள் சொல்லத்தான் செய்வார்கள். அவர்களா வந்து கேஸ் எழுதுறாங்க? என்று செம டோஸ் விடுகிறார்களாம். இதனால் எஸ்.எஸ்.ஐ.க்கள், ஏட்டுக்கள் வெளியே எது நடந்தாலும் இப்போது கண்டு கொள்வது இல்லை. எஸ்.பி. அலுவலகம், கட்டுப்பாட்டு அறை மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வாக்கி டாக்கி அல்லது செல்போனில் சொல்லக்கூடிய தகவல்களை மட்டும் விசாரித்து சொல்கிறார்களாம்.

சமீபத்தில் ஒரு காவல் நிலையத்தில், ரோந்து போன எஸ்.எஸ்.ஐ. போதை கும்பலை பிடிச்சுட்டு வந்து விட்டார் என்ற ஆத்திரத்தில் ரோந்து பணிக்காக அவருக்கு கொடுத்த பைக்கை இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டு பிடுங்கி கொண்டார்களாம். பைக் தந்ததால் தானே, ரோந்து போறீங்க. பேசாமல் ஸ்டேஷனில் இருங்கள் என்று கூறி விட்டார்களாம். இதனால் குமரி மாவட்ட காவல்துறையில் வேலை பார்த்தா இது தான் கதி என்று சிலர் நொந்து போய் உள்ளார்கள்.

* காவலர் குடியிருப்பிலேயே தொடரும் கொள்ளை: தவிக்கும் போலீஸ் குடும்பம்

மலைக்கோட்டை மாநகரின் சிவாஜி சிலை உள்ள பகுதியின் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளில் ஆட்கள் இருந்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் பணம், நகைகள் மாயமாகி வருகிறது. இதனால் குடியிருப்பில் குடியிருக்கும் காவலர்களின் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு ஏட்டு மனைவி தண்ணீர் பிடிப்பதற்காக மாடியில் வீட்டின் கதவை தாழிட்டு கீழே வந்து தண்ணீர் பிடித்து செல்வதற்குள் பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.

அந்த வழக்கு கிணற்றில் போட்ட கல் போல் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறப்பு எஸ்ஐ ஒருவரின் மனைவி தண்ணீர் பிடித்து செல்வதற்குள் 7 பவுன் நகைகள் திருடப்பட்டது. வழக்கம் போல் வழக்குபதிந்து விசாரணை நடந்து வருகிறது. இதுபோல் அடிக்கடி நடக்கும் சம்பவங்களால் எப்போது யார் வீட்டில் திருடு போகும் என காவலர்களின் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர். ஏற்கனவே திருடப்பட்ட வழக்கில் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை, கேட்டால் போலீஸ் பற்றாக்குறை என சாக்குபோக்கு கூறுகின்றனர்.எப்போது தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என காவலர்களின் குடும்பத்தினர் தீர்க்கமாக காத்துள்ளனர்.

Related Stories: