7 ஆண்டாக நடக்கும் 6 மேம்பால பணிகள் எப்போது முடியும் என்ற நிலையில் புதிதாக 18 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கு அறிவிப்பா? பொதுமக்கள் கேள்வி

7 ஆண்டாக நடக்கும் 6 மேம்பால பணிகள் எப்போது முடியும் என்ற நிலையில் புதிதாக 18 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கு அறிவிப்பா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தினமும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மாநகருக்குள் வருவதும், வெளியில் செல்வதுமாக இருக்கிறது. இவ்வாறு வரும் வாகனங்களால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2012ல் ரூ.146 கோடி செலவில் வேளச்சேரி -தாம்பரம் சாலையில் மேடவாக்கம் சந்திப்பில் 3 கி.மீட்டரில் மேம்பாலம், கோவிலம்பாக்கம் சந்திப்பு மேம்பாலம், ரூ.108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகரில் 1,400 மீட்டர் நீளத்தில் மேம்பாலம், ரூ.68.36 கோடி செலவில் 1038 மீட்டர் நீளத்தில், ஜவஹர்லால் நேரு சாலையில் கோயம்பேட்டில் காளியம்மன் கோயில் தெரு சந்திப்பு மற்றும் சென்னை புறநகர் பேருந்து நுழைவாயில் சந்திப்புகளை இணைத்து ரூ.93.50 கோடியில் பல்வழிச்சாலை மேம்பாலம், கீழ்க்கட்டளை அருகே மவுண்ட் மேடவாக்கம் சாலை மற்றும் பல்லாவரம் துரைபாக்கம் சந்திப்பில் ரூ.64 கோடியில் மேம்பாலம், ரெட்டேரி அருகில் பெரம்பூர் செங்குன்றம் சாலை சந்திப்பில் ரூ.41 கோடியில் பல்வழிச்சாலை மேம்பாலம்,

ஜிஎஸ்டி சாலை பல்லாவரத்தில் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.82 கோடியில் பல்வழிச்சாலை மேம்பாலம், ரூ.58 கோடியில் கிழக்கு கடற்கரை சாலை-திருவான்மியூர் சந்திப்பில் மேம்பாலம் என ரூ.593 கோடி செலவில் பால பணிகள் அறிவிக்கப்பட்டது. இதில், திருவான்மியூர் சந்திப்பில் மேம்பால பணிகளுக்கு தற்போது வரை நில எடுப்பு பணிகள் முடியவில்லை. மற்ற 6 பாலப்பணிகள் நில எடுப்பு பணி 1 ஆண்டுக்கு பிறகே முடிவடைந்தது. அதைதொடர்ந்து, 6 பால பணிகளுக்கும் டெண்டர் விட்டது.

குறிப்பாக, 6 முறை டெண்டர் விட்டும் கான்ட்ராக்டர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஒருவழியாக 6 மேம்பால பணிகளுக்கு தலா ஒரு மேம்பால பணிக்கு ரூ.15 கோடி முதல் ரூ.30 கோடி வரை கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த 2015ல் தான் 6 பாலப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் 7 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது வரை 50 சதவீத பணிகள் கூட முடியவில்லை. தற்போது வரை 6 மேம்பாலம் பணிகள் ஆமை வேகத்தில் தான் நடந்து வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது பால வேலைகளை  முடிப்பது என்றால் இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் வரை ஆக வாய்ப்புள்ளது.

இந்த பாலம் பணிகளால் அந்த பகுதியை கடக்கவே தினமும் பல மணி நேரம் ஆவதால் சொல்லண்ணா துயரத்தில் பொதுமக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அக்கரை, அம்பத்தூர், ஆவடி, மாதவரம், ராமாபுரம், குன்றத்தூர், கைவேலி, சேலையூர், கொரட்டூர், வடபழனி-பிடி.ராஜன் சாலை சந்திப்பு, மத்திய கைலாஷ் மற்றும் மடிப்பாக்கம் ஆகிய 13 இடங்களில் சாலை மேம்பாலம், பாடிகுப்பத்தில் ஒரு உயர்மட்ட பாலம்,  கேந்திரிய வித்யாலயா மற்றும் தாம்பரத்தில் உயர்மட்ட நடைபாதை, கொரட்டூரில் ஒரு ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்துதல் மற்றும் அம்பத்தூரில் ரயில்வே மேம்பாலம் என 18 இடங்களில் பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு ரூ.1122 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதே போன்று ஹால்டா சந்திப்பு முதல் அடையார், பசுமை வழிச்சாலை  மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக கலங்கரை விளக்கம் வரை, வடபழனியில் இருந்து போரூர் வரை, சின்னமலை முதல் வேளச்சேரி புறவழிச்சாலை வரை, அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சந்திப்பு, வால்டாக்ஸ் சாலையில் பேசின்பால சந்திப்பு, அம்பத்தூர் கல்லூரி அருகில் வியாசர்பாடி சந்திப்பு ஆகிய இடங்களில் பாலப்பணிகளுக்கு திட்ட அறிக்கை தயாரிக்கவும் ரூ.2.35 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, கடந்த 2012ல் அறிவிக்கப்பட்ட மேம்பால பணிகள் 7 ஆண்டுகளாகியும் தற்போது வரை நடந்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 18 இடங்களில் பாலம் அமைக்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடந்துவரும் பணிகளை முடிக்கவே 10 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், இப்போது நடைபெறும் பணிகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகப்போகிறதோ என்று தெரியவில்லை.முதல்வர் எடப்பாடி தான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக உள்ளார். அவர் இதுவரை சென்னையில் மேம்பாலம் நடைபெறும் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தது இல்லை. மேலும் மாநகராட்சி சார்பில் ஒரு பாலம் கூட 8 ஆண்டுகளில் கட்டப்படவில்லை என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.

Related Stories: