நிலவில் முதல் முதலாக மனிதன் கால் பதித்த நாள் இன்று!

வானத்தில் நிலாவை பார்த்துக் கொண்டே இருக்கலாம், அவ்வளவு அழகு, மனதில் குளிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரும் ஈர்ப்பு சக்தி கொண்டது என்று சொல்லலாம். எட்டாத தொலைவில் உள்ள அந்த நிலவில் மனிதன் முதன் முதலாக தன் காலடிச் சுவடை பதித்த நாள், இன்று. ஆம், கடந்த நூற்றாண்டின் மிக முக்கிய நாளாக 1969ம் ஆண்டின் ஜூலை 21ம் தேதியை வரலாற்று ஆய்வாளர்கள் கொண்டாடுகின்றனர். அந்த நிலவுக்கு மனிதன் சென்று வந்தது கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனை. அந்த சாதனையைத் தொடர்ந்து இந்த நூற்றாண்டிலும் நிலவில் குடியேற விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

சந்திராயன்-2ம் நிலவை நோக்கி அனுப்பப்படுகிறது. நிலவில் முதல் விண்வெளி பயணத்தை ரஷ்யா நிறைவேற்றியதும் அமெரிக்காவும் ஒரு படி மேலே சென்று நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியது. தொடர் ஆய்வுகள், சோதனைகளுக்கு பின்னர் காரியம் கைகூடியது. கடந்த 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி அப்பல்லோ 11 என்ற விண்கலத்தை அமெரிக்கா நிலவுக்கு ஏவியது. நான்கு நாள் பயணத்திற்கு பின்னர் அந்த விண்கலம், ஜூலை 20ம் தேதி நிலவில் தரை இறங்கியது. அந்த விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று பேர் சென்றனர்.

விமானி மைக்கேல் காலின்ஸ், விண்வெளி ஓடத்திலேயே தங்கிக் கொண்டார். நீல் ஆம்ஸ்ட்ராங்கும், எட்வின் ஆல்ட்ரினும் ‘ஈகிள்’ என்ற சிறிய ரக ஓடத்தில் நிலவில் ஜூலை 20ம் தேதி இறங்கினர். 6 மணி நேர தாமதத்துக்குப் பின்னர் ஜூலை 21ம் தேதியன்று நிலவில் இறங்கி உலகையே தங்கள் பக்கம் ஈர்த்து ஆச்சரியத்தில் மூழ்க வைத்தனர். ஈகிள் ஓடத்தில் இருந்து நிலவில் இறங்க முதலில், உத்தரவு அளிக்கப்பட்டது எட்வின் ஆல்ட்ரினுக்குத்தான். ஆனால், ஓடத்தில் இருந்து அவர் நிலவில் காலடியை எடுத்து வைக்க சிறிது தயக்கம் காட்டினார்.

இதையடுத்து, நீல் ஆம்ஸ்ட்ராங் தான் இறங்குவதாகக் கூறி, முதலில் காலடி எடுத்து வைத்தார். இதனால் நிலவில் கால் வைத்த முதல் மனிதன் என்ற பெருமையை (சாதனையை) தட்டிச் சென்றார் ஆம்ஸ்ட்ராங் நிலா ஆய்வில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பின்னர் நான்காவது நாடாக இந்தியாவும் களம் இறங்கியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஜூலை மாதத்தில்தான் சந்திராயன்-2 என்ற விண்கலமும் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியிலும் இந்தியா வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த சாதனையை நிகழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே உண்மை.

Related Stories: