நைனார்மண்டபம் செடல் திருவிழாவில் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி அலகு குத்தி காரை இழுத்த பக்தர்

புதுச்சேரி: புதுச்சேரி, நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோயில் செடல் ஊர்வலத்தில் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி அலங்காரம் செய்யப்பட்ட காரை பக்தர் ஒருவர் அலகு குத்தி இழுத்தது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

 புதுச்சேரி, நைனார்மண்டபத்தில் பிரசித்திபெற்ற நாகமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் 36ம் ஆண்டு செடல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் மற்றும் தேர்பவனி நேற்று மாலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்தது.

இதில் முதல்வர் நாராயணசாமி, பாஸ்கர் எம்எல்ஏ உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். முன்னதாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் உடலில் அலகு குத்தியும், கார், வேன், லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களை அலகு குத்தி இழுத்தும் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். அப்போது பக்தர் ஒருவர் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தும் வகையிலும், அனைத்து தரப்பினரும் தண்ணீரை சேமிக்க வேண்டும் எனக் கோரி வாகனத்தை அலங்காரம் செய்தும், தண்ணீர் சேமிப்பு குறித்த வாசகங்களை எழுதிய வாகனத்தை உடலில் அலகு குத்தி இழுத்து சென்றார். இது அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்களை வெகுவாக கவர்ந்தது.

Related Stories: