×

மோகனூர் காவிரியாற்றில் இரவு, பகலாக மணல் கொள்ளை: அதிகாரிகள் ஆசியுடன் நடப்பதாக குற்றச்சாட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் பல இடங்களில் மணல் கொள்ளை இரவு, பகலாக நடந்து வருகிறது. மணப்பள்ளியில் அரசு மணல் குவாரியும், பாலப்பட்டியில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கான மணல் குவாரியும் அரசின் அனுமதியுடன் இயங்கி வருகிறது. இந்த குவாரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு முறைகேடாக தினமும் லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு மணல் கடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. அரசு மணல் குவாரிகளில் நடந்து வரும் மணல் கொள்ளைக்கு போட்டியாக, ஒருவந்தூர், மணப்பள்ளி, பேட்டபாளையம், உன்னியூர் ஆகிய ஊர்களில் காவிரி ஆற்றில் சாக்குமூட்டைகளில் இரவு, பகலாக மணல் அள்ளப்பட்டு ஒரு இடத்தில் கொட்டிவைத்து லாரிகள்  மூலமாக வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல், நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் தினமும் 1000 மாட்டுவண்டிகளில் மணல் அள்ளப்பட்டு கடத்தப்படுகிறது.

குடிசைத்தொழில் போல மணல் கொள்ளை இந்த ஊர்களில் நடந்து வருகிறது. ஊர் முக்கிய பிரமுகர்கள், வேலையில்லா பட்டதாரிகள், விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளிகள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் கொள்ளையை  காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் கண்டுகொள்வதில்லை. இதனால், மணல் கொள்ளை தங்கு தடையின்றி நடந்து வருகிறது. உள்ளூர் விஏஓ முதல் தாசில்தார் வரையும், போலீஸ் ஏட்டு முதல் உட்கோட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் வரையும் லிஸ்ட் போட்டு மணல் கொள்ளையர்கள் கவனித்து விடுவதால் மணல் கொள்ளைக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் பொன்னுசாமி கூறுகையில், `ஆன்லைனில் மணல் புக்கிங் செய்தால் ஒரு லோடு மணல் கிடைக்க மணல்  லாரி உரிமையாளர்கள் ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

மணல் கொள்ளை மோகனூர் பகுதியில் நாள்தோறும் நடக்கிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்ப தில்லை. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. அரசு புதிய மணல் குவாரிகளை திறந்தால் தான், இதுபோன்ற மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த முடியும்` என்றார். ஒருவந்தூரில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் புதிய மணல் குவாரியை அரசு திறந்தது. ஆனால், அரசு குவாரிக்கு, ஊர்மக்கள் மற்றும் காவிரி ஆற்று பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி குவாரியை மூடவைத்துவிட்டனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் தற்போது அதே ஒருவந்தூரில் அரசின் அனுமதியின்றி மணல் கொள்ளை தீவிரமாக நடந்து வருகிறது.

Tags : Mohanur, night in the Kaveri River, day and night sand loot
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...