×

வறண்டு வரும் வீராணம் ஏரி: சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி லால்பேட்டை பகுதியில் இருந்து சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி வரை சுமார் 15 கிலோ மீட்டர் வரை நீளமும் அதிகபட்சமாக 5.6 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கனஅடி ஆகும். வீராணம் ஏரியின் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் நேரடி விவசாய பாசனமும், மறைமுகமாக சுமார் 1000 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெற்று வருகின்றன.
விவசாய பயன்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த ஏரிக்கு, மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அது கல்லணையை கடந்து கீழணைக்கு வரும். பிறகு அங்கிருந்து விவசாய பாசனத்துக்காக வடக்குராஜன், தெற்கு ராஜன் வாய்க்கால்கள் மற்றும் குமிக்கிமண் ஆறு, வடவாறு ஆகியவைகளுக்கு திறக்கப்படும். உபரிநீர் கொள்ளிடம் ஆறு வழியாக நேரடியாக கடலுக்கு திறந்துவிடப்படும். அதன்படி கடந்த வருடம் கிழணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது.

நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் கடந்த ஆண்டு 4 முறை முழு கொள்ளளவை எட்டியது. கடும் வெயில், மழை இல்லாத காரணத்தால் கடந்த 4 மாத காலத்தில் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. இதிலிருந்து சென்னை மெட்ரோவுக்கு மட்டும் தற்போது நாளொன்றுக்கு 33 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்கும் விதமாக சென்னை குடிநீருக்கென மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த பல வருடங்களில் எப்போதும் இல்லாதவாறு ஏரி ஒரே பருவத்தில் 5 முறை நிரம்பியது. ஆரம்பத்தில் விநாடிக்கு 150 கனஅடிநீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்தது. பிறகு படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 33 கனஅடி நீர் மட்டுமே அனுப்பப்படுகிறது. ஏற்கனவே வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் ஏரி வறண்டு போனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்.

மேலும் இந்த ஆண்டு பருவமழையும் தாமதமாகும் பட்சத்தில் வரும் காலங்களில் குடிநீர் பஞ்சம், சம்பா நடவு போன்ற தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வீராணம் ஏரியின் நீர்மட்டம்,  கடல் மட்டத்தை கழித்தால்  ஒன்றரை அடி அளவுக்கு தான் தண்ணீர் உள்ளது. விநாடிக்கு 33 கனஅடி சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்படுகிறது. தொடர்ந்து இதே கனஅடி நீர் அனுப்பினால்  சென்னைக்கு 2 வாரத்துக்கு மட்டுமே அனுப்ப முடியும். நிலைமையை சமாளிக்க என்எல்சியில் இருந்து சுரங்க தண்ணீரை சுத்திகரித்து சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் அவர்.

Tags : Dry, heroic lake, Madras, drinking water
× RELATED காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்:...