×

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தலைநகர் அமராவதி திட்ட கனவு தகர்ப்பு: நிதியுதவி உத்தரவாதம் இருந்தும் உலக வங்கி கைவிரிப்பு

புதுடெல்லி: ஆந்திர தலைநகராக அமராவதியை அமைப்பதற்கான கடனுதவியை உலக வங்கி நிறுத்திக் கொண்டுள்ளதால், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கனவு தகர்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் தலைநகராக ஐதராபாத் இருந்து வந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டின் போது ஆந்திரா, தெலங்கானா என 2 மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு 2 மாநிலங்களின் பொது தலைநகராக ஐதராபாத் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்குள்ளாக ஆந்திரா தனது புதிய தலைநகரை அமைத்துக் கொள்ள வேண்டும். ‘ஆந்திராவின் தலைநகர் அமராவதி என்ற பெயரில் அமையும்’ என்று 2014ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். அமராவதியை கட்டமைப்பதற்கு மொத்தம் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு செலவாகும் என கணிக்கப்பட்டது. இதுதொடர்பாக உலக நிறுவனங்களிடம் கடன் கேட்கும் முயற்சியில் ஆந்திர அரசு இறங்கியது.

மத்திய அரசின் மூலமாக 300 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரம் கோடி ரூபாயை உலக வங்கியிடம் இருந்து பெறும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய பாஜ அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டார். ெதாடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மக்களவை தேர்தலையும் சந்தித்தார். ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மீண்டும் மத்தியில் பாஜ ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.

அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களால் பதவியிழந்த சந்திரபாபு நாயுடுவின், அமராவதி தலைநகர் கனவு திட்டத்திற்கும் தற்போது சோதனை வந்துள்ளது. இதற்கு காரணம் கடனுதவி பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை உலக வங்கியிடம் இருந்து மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதே என்று கூறப்படுகிறது.  இதனால், சந்திரபாபு நாயுடுவின் கனவு திட்டம் பொய்த்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தனியார் ெசய்தி நிறுவனம் ஒன்றிற்கு உலக வங்கியின் செய்தி தொடர்பாளர் சுதிப் மசூம்தார் கூறுகையில், ‘‘அமராவதி தலைநகர் அமைப்பதற்கான கடனுதவி வழங்குவதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

Tags : Chandrababu Naidu, Amaravati, Financial Guarantee, World Bank
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...