×

சுதந்திர தின உரைக்கு மக்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை: அறிவித்த 2 மணி நேரத்துக்குள் 850 பேர் கருத்து பதிவு

டெல்லி: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் மக்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என அறிவித்த 2 மணி நேரத்துக்குள் 850 பேர் கருத்து பதிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திர தின உரையில் தான் பேசவேண்டிய விஷயங்கள் குறித்து ‘நமோ’ ஆப்-ல் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்,’ என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சுதந்திர தினந்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நீண்ட நேரம் உரையாற்றுவார். இதில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து பொதுமக்களிடம் அவர் ஆண்டுதோறும் ஆலோசனை கேட்பது வழக்கம். கடந்த 4 ஆண்டுகளாக சுதந்திர தின உரைக்கு நமோ-ஆப் மூலம் மக்களிடம், பிரதமர் மோடி ஆலோசனை கேட்டிருந்தார்.

இதில், மக்கள் தெரிவிக்கும் முக்கிய விஷயங்களை அவர் தேர்வு செய்து, தனது உரையில் அதை விரிவாக பேசுவார். தற்போது 2வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள மோடி, மீண்டும் அதே முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் நேற்று விடுத்துள்ள செய்தியில், ‘வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நான் ஆற்றும் சுதந்திர தின உரைக்கு உங்களின் மதிப்புமிக்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். செங்கோட்டையில் இருந்து ஒலிக்கும்  உங்களின் சிந்தனைகளை நாட்டின் 130 கோடி மக்களும் கேட்கட்டும்,’ என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் ‘நமோ ஆப்’ மூலம்  தெரிவிக்கலாம் என்று மோடி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான 2 மணி நேரத்தில் சுமார் 850 பேர் தங்கள் கருத்தைப் பதிவிட்டுள்ளனர். இன்று பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் கருத்தைப் பதிவிட்டுள்ளனர்.

Tags : Independence Day speech, PM Modi, advised
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...