மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

* இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த குரங்கு அருவியில், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட துவங்கியது. இதையடுத்து, இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.  பொள்ளாச்சியை அடுத்த, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைபொழிவு இருக்கும் காலகட்டத்தில் ஆழியார் அருகே உள்ள குரங்கு  அருவியில் தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும். அப்போது உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகமாக இருக்கும்.

 இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கத்தால், குரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் அளவு மிகவும் குறைந்தது. கடந்த பிப்ரவரி  மாதம் வரை அருவியின் ஓரத்தில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பின் மார்ச் மாதம் துவக்கத்திலிருந்து முற்றிலுமாக நின்று வெறும் பாறையாக மாறியது. இதனால், குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.  மேலும், குரங்கு அருவிக்கு என  சோதனை சாவடியில் நுழைவு டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சிலநாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், நேற்று மதியம்  முதல் குரங்கு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட துவங்கியது.   பல மாதத்திற்கு  பிறகு  குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், இன்று (20ம் தேதி) முதல்,  குரங்கு அருவியில் தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: