மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, சில்லறையில் மது விற்பனை குற்ற சம்பவங்களின் கூடாரமாகும் பழநி தாலுகா

* உறக்கத்தில் போலீஸ்

பழநி : பழநி தாலுகா பகுதியில் மணல் கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகளவு நடந்தும் நடவடிக்கை எடுக்காமல் போலீசார் உறங்கிக் கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.பழநி தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி ஆகிய பேரூராட்சிகளும் பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அ.கலையம்புத்தூர், சின்னக்கலையம்புத்தூர், பெரியம்மாபட்டி, காவலப்பட்டி உள்ளிட்ட முக்கிய ஊராட்சிகளும் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் ஓடைப்பகுதிகளில் இருந்து திருடத்தனமாக மணல் அள்ளப்படுவதாக அதிகளவு புகார் எழுந்துள்ளது. அதுபோல் பெட்டிக் கடைகளில் கூட 24 மணி நேரமும் சில்லறையில் மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

பாப்பம்பட்டி பகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டுமொத்த கஞ்சா சப்ளை செய்யும் பகுதியாக உள்ளது. ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய தாலுகா போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட எஸ்பிக்கும் உரிய தகவல்கள் சென்றடையாமல் தடுக்கப்படுவதாக போலீசார் சிலர் புலம்பி தவிக்கின்றனர். இதுதொடர்பாக பழநி வட்டார நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் பழனிச்சாமி கூறியதாவது, ‘பழநி தாலுகாவில் சமூக ஆர்வலர் பெருமாள்புதூர், ஓடைக்காடு, பொருந்தல் பகுதியில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் துவங்கி, டிப்பர் லாரிகள் வரை ஓடை மற்றும் தோட்டப்பகுதிகளில் இருந்து மணல்களை அதிகளவு எடுத்துச் செல்கின்றனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். பலமுறை போராட்டங்களும் நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

நெய்க்காரப்பட்டி மற்றும் பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளில் கூட சில்லறையில் மது விற்பனை நடைபெறுகிறது. ஆனால், தடுப்பு நடவடிக்கைகள் ஏதுமில்லை.

கஞ்சா விற்பனையும் சில நாட்களாக அதிகளவில் நடப்பதாக கூறப்படுகிறது. தவிர, இப்பகுதியில் உள்ள சேம்பர்களுக்கும் முறையான அனுமதியின்றி குளங்களில் இருந்து மண் எடுத்துச் செல்லப்படுகிறது. போலீசார் ஹெல்மெட் அணியாதவர்களை விரட்டுவதை குறைத்துவிட்டு, குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய முன்வர வேண்டும். கண்டுகொள்ளாமல் இருக்கும் மாவட்ட காவல்துறையும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’ இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: