7 பேர் விடுதலை என்னவாயிற்று? ஆளுநர் பதவி தேவையில்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது; மு.க.ஸ்டாலின்

சென்னை: மாநிலங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று போராடியவர் அண்ணா என்று தமிழக சட்டப்பேரவையில் பொதுத்துறை மீதான விவாதத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் இதே அவையில் மாநில சுயாட்சி கொண்டு வந்தவர் கலைஞர் என்று பெருமையுடன் ஸ்டாலின் தெரிவித்தார். அண்ணா, கலைஞர் குரல் கொடுத்த மாநில சுயாட்சியின் நிலை என்ன? என்று ஸ்டாலின் பொதுத்துறை மீதான விவாதத்தின் போது கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் பதவி தேவையில்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்றும், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை என்னவாயிற்று என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 4 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அரசு அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தற்போது வரை எவ்வளவு வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பினார். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை என மத்திய அரசு வெறுப்பு அரசியலை உண்டாக்கி வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவை நிகழ்வு - நேரலை செய்ய வலியுறுத்தல்

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று பொதுத்துறை மீதான விவாதத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். சட்டப்பேரவை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளதாக தெரிவித்த ஸ்டாலின், சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய செலவு அதிகமாகும் என்று அரசு கூறுவதை சுட்டிக்காட்டினார். செலவை விட வெளிப்படைத்தன்மை முக்கியம் என்று ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருமழிசையில் அறிவியல் நகர் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு என்னவாயிற்று என்றும் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாக உள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

ஓ.பி.எஸ். விளக்கம்

சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். சட்டமன்ற நடவடிக்கையில் சரிபாதி காட்சிகள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Related Stories: