முதியோர்கள், கர்ப்பிணிகள் அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம்... ஆட்சியரின் திடீர் கட்டுப்பாட்டால் பக்தர்கள் அதிர்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 20-வது நாளான இன்று ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி இன்று காட்சியளிக்கிறார். காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் முதியோர்கள், உடல் நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் ஆகியோரை அழைத்து வருவோர் கோவிலுக்கு வருவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் கடந்த 1ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 17ம் தேதிவரை 48 நாட்கள் நடைபெறுகிறது. முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.கடந்த 19 நாட்களில் சுமார் 22 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.  அதிகபட்சமாக கடந்த சனிக்கிழமை சுமார் 2.50 லட்சம் பக்தர்கள், திருவோணம் நட்சத்திர நாளான நேற்று முன்தினம் சுமார் 2.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் கட்டுக்கடங்காத கூட்டத்தால் திடீரென நெரிசல் ஏற்பட்டு கிழக்கு கோபுரம் மற்றும் மேற்கு கோபுரம் பகுதியில் 31 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். அதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று மாலை தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்த சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் (72) என்பவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

மருத்துவமனை கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முதியோர்கள், உடல் நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் ஆகியோரை அழைத்து வருவோர் கோவிலுக்கு வருவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: