தமிழகத்தில் சென்னை, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சென்னை: தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 14 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. நெல்லை மேலப்பாளையத்தில் முகமது இப்ராஹிம் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தேனி மாவட்டத்தில் கோம்பை பகுதியில் மீரான் கனி, முகமது அப்சல் ஆகியோரது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

‘அன்சுருல்லா’ என்ற புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதலை நடத்த உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிதி திரட்டியது, தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டது போன்றவற்றுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை தொடர்ந்து சென்னையை சேர்ந்த சையது புகாரி மற்றும் நாகையை சேர்ந்த அசன் அலி அவரது உறவினர் அரிஷ் முகமது ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், முக்கிய குற்றவாளியான சையது புகாரியை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணையில் வைத்துள்ளனர். இதற்கிடையே சிரியாவில் பயிற்சி பெற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த 14 பேரும் அந்த நாட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்களை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த திங்கள் கிழமை இரவு டெல்லி விமான நிலையத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் 14 பேரையும் பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட 16 பேரையும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று காலை 11 மணிக்கு பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செந்தூர்பாண்டியன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது நாட்டிற்கு எதிராக பல சதி திட்டம் தீட்டி இருந்ததால் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் மனு மீதான விசாரணைக்கு பிறகு நீதிபதி செந்தூர் பாண்டியன் 16 பேரிடம் 8 நாள் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். மேலும், 16 பேரையும் வரும் 26ம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.அதைதொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 16 பேரையும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: