×

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் கூடுதல் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள்

புதுடெல்லி: அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை இறுதி செய்வதற்காக கூடுதல் கால  அவகாசம் வழங்கக் கோரி அசாம் மாநில அரசும், மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்துள்ளன. அசாம் மாநிலத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியேறி உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, அங்கு 1951ம் ஆண்டு தேசிய  குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு அசாம் தேசிய  குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற 3.29 கோடி பேர் விண்ணப்பித்தனர். அதன்  இறுதி வரைவு பட்டியலில் 2.89 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றனர்.  மீதமுள்ளவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன.

இது தொடர்பாக சர்ச்சை  எழுந்ததை தொடர்ந்து விடுபட்டவர்களின் விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்ய  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் மீண்டும் புதிய ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அசாம் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலை இறுதி  செய்ய 2019ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் கால அவகாசம்  வழங்கியது. இந்நிலையில், அசாம் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலை  இறுதி செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக மத்திய அரசும், அசாம் அரசும்  உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தன. தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகோய் அமர்வு முன் மத்திய, அசாம் மாநில அரசுகளின் சார்பில் ஆஜரான  சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும்  நிராகரிக்கப்பட்டவர்கள் பட்டியலில் பல தவறுகள் நடந்துள்ளதாக சந்தேகம்  எழுந்துள்ளது. எனவே, இதனை இறுதி செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்,’’  என்று கோரினார்.

‘அகதிகளுக்கான தலைநகரம் அல்ல’:
மத்திய, அசாம் அரசுகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வாதாடிய துஷார் மேத்தா, ‘‘உலக அகதிகளுக்கான தலைநகரமாக இந்தியா இருக்க  முடியாது. உள்ளூர் அதிகாரிகளின் செயல்களால்தான் லட்சக்கணக்கான சட்ட விரோத  குடியேறிகளின் பெயர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே, தேசிய  குடிமக்கள் பட்டியலை மீண்டும் சரிபார்க்க வேண்டும். இந்த மறு ஆய்வு  விசாரணை, புலனாய்வில் திறம்பட பணியாற்றிய முதல்நிலை அரசு அலுவலர்களை கொண்டு  நடத்தப்பட உள்ளது,’’ என்றும் தெரிவித்தார். முன்னதாக தேசிய  குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியலில் இடம்பிடித்துள்ள வங்கதேச  எல்லையில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்களில் 20 சதவீதம் பெயர்களை மறு  ஆய்வு செய்யவும் பிற மாவட்டங்களில் 10 சதவீதம் பெயர்களை மறு ஆய்வு  செய்யவும் அனுமதி கோரி மத்திய, அசாம் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் ஜூலை  17ம் தேதி மனு தாக்கல் செய்து இருந்தன.

வழக்கு விசாரணையின் முடிவில்  மத்திய, மாநில அரசு கேட்டு கொண்டதன் அடிப்படையில் 20 சதவீதம் பெயர்களை மறு  ஆய்வுக்கு உட்படுத்த நீதிபதிகள் அனுமதி வழங்கினர். இது குறித்து ஜூலை 23ம்  தேதி விரிவாக விவாதம் நடத்தப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். அன்றைய  தினம் மத்திய மாநில அரசுகளின் கால அவகாச கோரிக்கை குறித்து முடிவு  செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : National Citizens Registry, Supreme Court,
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் 6 மாதங்களில் 4...