களப்பணியில் உள்ள 72 ஆயிரம் காவலர்களுக்கு மாதம் 5 லிட்டர் பெட்ரோல் செலவு தொகை: முதல்வர் அறிவிப்பு

சென்னை: காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள 72 ஆயிரம் காவலர்களுக்கு மாதம் 5 லிட்டர் பெட்ரோல் செலவுக்கான தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்புகள்:

* காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள 72 ஆயிரம் காவல் ஆய்வாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5 லிட்டர் பெட்ரோல் செலவுக்கான தொகை எரிபொருள் படியாக வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.30 கோடி செலவு ஏற்படும்.

* தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம், நாமக்கல் மாவட்டம் செங்கரை, மதுரை திருபாலை மற்றும் மாட்டுத்தாவணி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உட்பட 5 புதிய காவல் நிலையங்கள் ரூ.14.75 கோடி செலவில் உருவாக்கப்படும்.

* திருப்பூர் மாவட்டத்தில் ரூ.91.74 லட்சம் செலவில் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கப்படும்.

* காவல் துறை தலைமையகத்தின் அனைத்து ஆவணங்களும் ரூ.5.10 கோடி செலவில் எண்ம இலக்க முறையில் காப்பகப்படுத்தப்படும்.

* காவல் துறையில் வாகன மேலாண்மை மற்றும் சொத்து மேலாண்மை ஆகியவற்றில் `தானியக்கம்’’ ரூ.25 லட்சம் செலவில் அமல்படுத்தப்படும்.

*  அனைத்து காவல் ஆணையரகங்களுக்கும் மின் ரோந்து காவல் முறை ரூ.1.26 கோடி செலவில் அமல்படுத்தப்படும்.

*  சட்டம்-ஒழுங்கு பிரிவுகளுக்கு, உடல் இணை புகைப்பட கருவி மற்றும் ஆளில்லா விமானங்கள் ரூ.1.38 கோடி செலவில் வாங்கப்படும்.

*  காவல்துறையில் பதக்கம் பெறும் ஒவ்வொருவருக்கும் முதல்வர் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.

* சென்னை வேப்பேரி தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம், 2 அலுவலர் குடியிருப்புகள், காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தில் 6 அலுவலர் குடியிருப்புகள் மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரியில் 13 குடியிருப்புகளும் ரூ.6.01 கோடி செலவில் கட்டப்படும்.

* பழைய மகாபலிபுரம் சாலைக்கு பிரத்யேகமாக ரூ.12 கோடி செலவில் 54 மீட்டர் உயரம் கொண்ட வான்நோக்கி நகரும் ஏணி வாங்கப்படும்.

* தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளை வானில் இருந்து கண்காணிக்க ரூ.1 கோடி செலவில் 50 ஆளில்லா விமானங்கள் வாங்கப்படும்.

*  ரூ.8.54 கோடி செலவில் 1,500 தீயணைப்பு பணியாளர்களுக்கு தற்காப்பு சாதனங்களுடன் கூடிய உடைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: