உள்ளாட்சி தனி அதிகாரிகள் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு: டிசம்பர் 31 வரை தேர்தல் கிடையாது

சென்னை: உள்ளாட்சி தனி அதிகாரிகள் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.  உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது: அண்மையில்தான் வாக்காளர் பட்டியலின் வன்நகல் மற்றும் மென்நகல் இந்திய தேர்தல் ஆணையத்தின் உரிய ஒப்புதலோடு பெறப்பட்டு, இதுதொடர்பான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் மென்படிவத்திலான வாக்காளர் பட்டியலுக்கு ஏப்ரலில் தன்னுடைய ஒப்புதலை வழங்கியுள்ளது. அந்த வாக்காளர் பட்டியலை வார்டு வாரியாக மாற்றுவதற்கும், இப்பணியை செய்து முடிப்பதற்கும் 95 நாட்கள் காலம் தேவை என தேசிய தகவல் மையம் கோரியுள்ளது.

அதனால், உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கு முன்பு, உள்ளாட்சி அமைப்பு தேர்தல் தேதியை அறிவிக்க இயலாது. இந்த சூழ்நிலையில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் காரணமாக தனி அலுவலர்களின் பதவி காலத்தை டிசம்பர் 31ம் தேதி வரை, மேலும் 6 மாதங்களுக்கு அல்லது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கான சாதாரண தேர்தல்களுக்கு பிறகு நடத்தப்படும் கூட்டம் வரை, இதில் எது முந்தையதோ அதுவரையில் நீட்டிப்பதற்கு அரசை இயல்விக்கும் வகையில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவால் டிசம்பர் 31ம் ேததி வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதாவுக்கு திமுக ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: