திராவிட கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்: பேரவை தலைவர் பேச்சு

சென்னை: ராமசாமி படையாட்சியார் திருவுருவப்படம் திறப்பு விழாவில் சட்டப் பேரவை தலைவர் தனபால் பேசியதாவது:   தன்னுடைய அப்பழுக்கற்ற பொதுப்பணியாலும், எவரிடமும் அன்போடு பழகும் தன்மையாலும், அனைத்துத் தரப்பு மக்களும்  பாராட்டும்படி வாழ்ந்து காட்டிய மாமனிதர் ராமசாமி படையாட்சியார். திராவிடக் கொள்கைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். பிற்படுத்தப்பட்ட மக்கள் உயர்வுக்காகப் போராடியவர். 1954ம் ஆண்டு  காமராஜர் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றபோது, அந்த அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியுள்ளார்.

சாதி, சமயத்திற்கு அப்பாற்பட்டு அனைவருடனும் அன்பாக பழகியதோடு மட்டுமல்லாமல், இனிமையான பண்பும், எளிமையான பாங்கும் கொண்டதால் தான், விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு ராமசாமி படையாட்சியார் பெயரைச் சூட்ட வேண்டும் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் 1993ம் ஆண்டு கோரிக்கை வைத்தனர்.  

ராமசாமி படையாட்சியாரை கவுரவிக்கும் வகையில், விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்ட மாவட்டத்திற்கு விழுப்புரம் ராமசாமி படையாச்சியார் மாவட்டம் என்று 1993ம் ஆண்டு பெயர் சூட்டப்பட்டது. தற்போது அவருடைய திருவுருவப் படத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதல்வர் திறந்து வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: