சிசிடிவி கேமராவால் சங்கிலி பறிப்பு குறைந்துள்ளது: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த 8 வருடங்களாக காவல் துறையினர் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினால் மாநிலத்தில் பெரும்பாலான குற்றங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. உதாரணத்திற்கு, கடைசியாக வெளிவந்த தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, நமது மாநிலத்தில் வன்குற்றங்கள் 10,844 ஆகும். ஆனால், கேரளாவில் 13,548 வழக்குகளும், கர்நாடகாவில் 19,648ம், குஜராத்தில் 11,829ம், ஒடிசாவில் 19,092ம், அரியானாவில் 14,392ம், ராஜஸ்தானில் 16,223 வழக்குகளும் தாக்கலாகியுள்ளன.  அதேபோன்று குற்றங்கள் தாக்கல் ஆவதும், குற்ற விகிதமும் மற்ற மாநிலங்களைவிட மிக குறைவாக இருந்து வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக கொலை உள்ளிட்ட சொத்து சம்பந்தமாக தாக்கலான ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 297 வழக்குகளில், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 499 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் கேமராக்கள் பொருத்த தேவையான முக்கிய இடங்களாக ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 390 அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 690 கட்டிடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சென்னை மாநகரத்தில் 59 ஆயிரத்து 627 பொது கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுள் 46 ஆயிரத்து 865 கட்டிடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 2018ம் ஆண்டில் ஜூன் மாதம் முடிய நடந்த சங்கிலி பறிப்பு வழக்குகள் 258. ஆனால், இந்த ஆண்டில் (2019) ஜூன் மாதம் வரை 135 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதிலும், 109 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்டு, புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. காவல் துறையினரின் விரைவான நடவடிக்கை மற்றும் சிசிடிவி கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டதால், பெருமளவில் சங்கிலி பறிப்பு குறைந்துள்ளது.

காவல் துறையில் 30-6-2019 நிலவரப்படி அனைத்து பதவிகளிலும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 769. இதில் பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 75. காலியாக உள்ளது 9 ஆயிரத்து 694 இடங்கள் மட்டுமே. அந்த காலி பணியிடங்களில் தற்போது, 969 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 8,427 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  காலியாக உள்ள இடங்களை நிரப்ப 226 தொழில்நுட்ப உதவி ஆய்வாளர்களும், 179 விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் இருந்து வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் காவலர் முதல் காவல்துறை இயக்குநர் வரை பல்வேறு பதவிகளில் 64 ஆயிரத்து 510 பேர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளன.

Related Stories: