திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் அதிகாரி செந்தில்நாதனை மாற்றும் கோரிக்கையை பரிசீலிக்குமாறு தொழிலாளர் ஆணையருக்கு உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஜூலை 14ம் தேதி நடத்துவதென ஜூன் 10ம் தேதி நடந்த பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. பின்னர் தேர்தல் ஜூலை 21ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதற்கிடையில், தேர்தல் அதிகாரியான வக்கீல் அ.செந்தில்நாதனை மாற்ற வேண்டுமென திரைப்பட இயக்குனர் ஜெகநாத் என்கிற கே.பி.ஜெகன் தொழிலாளர்  ஆணையர் மற்றும் இணை ஆணையரிடம் ஜூலை 17ம் தேதி புகார் கொடுத்தார்.  

ஆனால், அவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, தனது புகாரை பரிசீலித்து தேர்தல் அதிகாரி செந்தில்நாதனை மாற்றுமாறு தொழிலாளர் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி ஜெகநாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கு நேற்று நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, ஒவ்வொரு சங்க தேர்தலின் போதும் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த வழக்கு உரிமையியல் சார்ந்த வழக்கு என்பதால் சிவில் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: