சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை சந்தித்து பேச இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

இஸ்லாமாபாத்: சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, தனது நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை சந்தித்து பேச, இந்திய  தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான்  வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட  இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், தனது நாட்டில் உளவு பார்த்ததாகவும்,  தீவிரவாத செயலில் ஈடுபட்டதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. அவருக்கு இந்திய  தூதரக உதவிகள் கிடைக்கவும் அது அனுமதிக்கவில்லை. அந்நாட்டு ராணுவ  நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நெதர்லாந்து  நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு  தொடர்ந்தது.  அதில், வியன்னா ஒப்பந்தப்படி குல்பூஷன் ஜாதவை இந்திய  தூதரகம் அணுக பாகிஸ்தான் அனுமதி மறுத்ததாக குற்றம்சாட்டியது. இந்த வழக்கில்  சர்வதேச நீதிமன்ற தலைவர் அப்துல் குவாவி அகமது யூசப் கடந்த புதன்கிழமை  அளித்த தீர்ப்பில், ‘வியன்னா ஒப்பந்த விதிமுறைகளை பாகிஸ்தான் மீறியுள்ளது.  குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். அவருக்கு  இந்திய தூதரக உதவிகள் கிடைக்க அனுமதிக்க வேண்டும். அவரது தண்டனையை  ரத்து செய்வது பற்றி பாகிஸ்தான் தீவிர மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.

அதே நேரம், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யவும்,  குல்பூஷனை  பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைகளை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்தது.  இந்நிலையில், சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தனது நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாதவை சந்தித்து பேசுவதற்கு இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அரசு நேற்று அனுமதி அளித்தது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வியன்னா  ஒப்பந்தப்படி, போர் கைதிகளை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிப்பது தொடர்பான தகவல்,  குல்பூஷன் ஜாதவுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின்  சட்டங்களுக்கு உட்பட்டு இந்திய தூதரக அதிகாரிகள் அவரை சந்திக்கலாம். அதற்கான நடைமுறைகளை வகுக்கப்பட்டு வருகிறது,’ என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, ‘உளவு  பார்த்தது தொடர்பாக குல்பூஷன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

‘பாக்.குக்கு பாதுகாப்பு, நிதியுதவி கிடைக்காது’:

பாகிஸ்தான்  பிரதமர் இம்ரான்கான், வரும் 21ம் தேதி அமெரிக்காவுக்கு பயணம் செல்கிறார். இந்தநிலையில், அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில், `தீவிரவாத அமைப்புகளின் மீது பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை  எடுக்காமல் ஏமாற்றி வருவதால், அந்நாட்டிற்கு அளித்துவரும் பாதுகாப்பு  நிதியுதவி கடந்த 2018 ஜனவரி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்காத வரையில், பாகிஸ்தானுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படாது’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: