இந்தியா-நேபாளம் இடையே 18 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை : திட்ட அறிக்கை சமர்பிப்பு

காத்மாண்டு: இந்தியா-நேபாளம் இடையே 18.5 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை, ரயில்வே துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.  உத்தரப் பிரதேசம் மாநிலம், பக்ரெய்ச் மாவட்டத்தின் ருபைதிகா கிராமம் இந்தியா-நேபாளம் எல்லை அருகே அமைந்துள்ளது. ருபைதிகா ரயில் நிலையத்திலிருந்து நேபாளத்தின் கோகல்பூர் வரை 18.5 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான ஆய்வுக்குழுவை மத்திய அரசு அமைத்தது. ருபைதிகா ரயில் நிலையம், ஜெயஸ்பூர், இந்திராபூர், குருவா கான், ஹவல்தல்பூர், ராஜ்ஹெனா வழியாக நேபாளத்தின் கோகல்பூர் வரை ரயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை இந்த ஆய்வுக்குழு தயாரித்தது. இந்த பாதை அமைக்கப்பட உள்ள இடங்களில் பல சரணாலயங்கள் உள்ளன. அவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், ரயில் பாதையை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) ரயில்வே துறையிடம் இந்திய குழுவினர் சமர்ப்பித்துள்ளதாக நேபாளத்தில் வெளியாகும் ஹிமாலயன் டைம்ஸ் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

Related Stories: