ஆண்டுக்கு 6,000 நிதியுதவி வழங்கும் திட்டம் 2.69 லட்சம் விவசாயிகளுக்கு முதல் தவணை தராதது ஏன்? மாநிலங்களவையில் அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தில் இன்னும் 2.69 லட்சம் விவசாயிகளுக்கு முதல் தவணை கூட கிடைக்காதது ஏன்? என்பதற்கு விவசாயத்துறை அமைச்சர் புருசோத்தம் ரூபாலா விளக்கம் அளித்துள்ளார்.

 பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை கடந்த பிப்ரவரியில் பாஜ அரசு அறிவித்தது. இதன்படி, 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் 14.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இந்த தொகை நேரடியாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளில் செலுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நேற்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அமைச்சர் ரூபாப்லா அளித்த பதில்: கிஷான் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக தலா ரூ.2,000 வீதம் 4.14 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணையாக ரூ.8,290.6 கோடியும், 2வது தவணையாக 3.17 கோடி விவசாயிகளுக்கு ரூ.6,355.8 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இணையாத மேற்கு வங்கம் மற்றும் டெல்லி அரசுகள் விரைவில் இணைந்து விவசாயிகள் பயனடைய செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மணிப்பூர், நாகலாந்து, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் முறைப்படுத்தப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்கள் இல்லை. குறிப்பாக ஜார்க்கண்டில் 1932க்கு பிறகு நிலம் தொடர்பான ஆவணங்கள் பதிவேற்றப்படவில்லை. எனவே, அதை பதிவேற்றம் செய்யும்படி அந்த மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பயனாளர்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். கிஷான் திட்டத்தில் முரண்பாடுகள் உள்ளதே என்ற துணைக்கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், `2.69 லட்சம் விவசாயிகள் முதல் தவணையை பெறாததற்கு மாநில அரசு தந்த பயனாளர்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்டவைகளில் தவறு இருப்பதே காரணம். இதை சரி செய்து மாநில அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் விவசாயிகள் கணக்கில் அந்த பணம் செலுத்தப்படும். விவசாய தொழிலாளர் மற்றும் குத்தகைதாரர்களுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இல்லை’ என்றார்.

Related Stories: