தேசிய எக்ஸிட் தேர்வை எதிர்க்க வேண்டும் மாநில மருத்துவக்கல்லூரி கட்டுப்பாட்டை முழுவதுமாக எடுத்து கொள்ளும் ஆபத்து: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தேசிய மருத்துவக்கழக மசோதா குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அமைச்சரவையில் தேசிய எக்ஸிட் தேர்வு குறித்து ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றது. தேசிய மருத்துவக்கழக அமைப்பு தொடர்பான மத்திய அரசின் புதிய மசோதா மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய வகையில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தேசிய மருத்துவக் கழகத்தின் உறுப்பினர்கள் நியமனத்தை பொருத்தமட்டில் தமிழகம் போன்று அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கக்கூடிய மாநிலத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தேசிய மருத்துவக் கழகத்திற்கு உறுப்பினர்கள் தலைவரை தேர்வு செய்யக் கூடிய நிலை தேர்வு குழுவுக்கும், மாநிலங்களுக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை. முன்பு வெளிவந்த மசோதாவில் எம்.பி.பி.எஸ். முடித்த பிறகு தேசிய எக்ஸிட் தேர்வு வைத்திருந்தார்கள்.

தேசிய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து மருத்துவராகப் பணி புரிவதற்கு இது மிகவும் முக்கியம் என்றும் கூறியிருந்தார்கள். ஆனால் இப்பொழுது, எம்.பி.பி.எஸ் கடைசி வருடம் மத்திய அரசே ‘தேசிய எக்ஸிட் தேர்வு’ நடத்தும் என்று கூறியிருப்பது, மாநிலத்தில் இருக்கக்கூடிய மருத்துவக்கல்லூரி கட்டுப்பாட்டை முழுவதுமாக மத்திய அரசு எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு ஆபத்து இப்போது ஏற்பட்டிருக்கின்றது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு இந்த தேசிய எக்ஸிட் தேர்விலிருந்து விலக்களிக்கலாம் என்பது சென்னையில் இருக்கக்கூடிய மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ் போன்றவற்றை அவமதிக்கக்கூடிய போக்காக இது அமைந்திருக்கின்றது. மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்லூரிகள் இல்லை என்று மத்திய அரசு கருதுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆபத்தாக அமைந்திருக்கின்றது.

எனவே, தேசிய மருத்துவக் கழக மசோதாவை கடுமையாக நம்முடைய தமிழக அரசு எதிர்க்க வேண்டும். மருத்துவ கல்லூரிகள் நடத்துவது மாநிலங்களுடைய உரிமை என்பதை மத்திய அரசிற்கு நம்முடைய மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: எதிர்க்கட்சி தலைவர் சொன்ன கருத்து தான் எங்கள் கருத்து. இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. 2016ம் ஆண்டு இதற்கான மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. அப்போது அதிமுக எம்பிக்கள் கடுமையாக எதிர்த்தனர். கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பியும், நேரில் சென்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த தேர்வை எதிர்ப்பதில் உறுதியாகவுள்ளோம். இன்னொரு தேர்வு எழுதக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம். முழு விவரம் வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

பொன்.மாணிக்கவேல் விசாரித்த 6 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை:

பொன்.மாணிக்கவேல் விசாரித்த 6 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை  செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.  அவர் கூறியதாவது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன். மாணிக்கவேல் கடந்த 2012 முதல் 2015 வரை காவல் துறை துணைத் தலைவராகவும், 2015 முதல் 30.11.2018 வரை  இத்துறையின் தலைவராகவும் பணியாற்றினார். 1.10.2018 முதல் இதே துறையின் சிறப்பு அதிகாரியாக உயர் நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்டு நாளது வரை சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.    இவருடைய பணிக் காலத்தில் 7 வழக்குகளில் மட்டுமே நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளார். 2012-லிருந்து 2018-வரைக்கும். 6 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை பெற்றுள்ளனர்.   1983 முதல் 10.2.2012 வரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் 259 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  சராசரியாக, அந்த 28 ஆண்டு காலகட்டத்தில், 9 வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் பதியப்பட்டுள்ளன.

இவருடைய பணிக் காலத்தில் சராசரியாக வெறும் 4 வழக்குகள் தான் பதியப்பட்டுள்ளது.  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொன். மாணிக்கவேல் சிலை திருட்டு மற்றும் கடத்தல் தடுப்புப் பிரிவின் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, அப்பிரிவிற்கு அவர் கோரியபடி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு அதிகாரிக்கு நிதி மற்றும் வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக அரசாணைகளை அரசு வெளியிட்டுள்ளது.  பொன். மாணிக்கவேல் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அனைத்து வசதிகளும் அவருக்கு செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த துறைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

Related Stories: