×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காங்கிரஸ் கேள்விக்கு எடப்பாடி விளக்கம்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கையை சட்டப் பேரவை உறுப்பினர்கள் அறிந்து கொள்ள வசதியாக பேரவையில் வைக்க வேண்டும் என்று சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி தெரிவித்தார்.  சட்டப்பேரவையில் போலீஸ் துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினர்கள் பேசியதாவது:  சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி: தமிழகத்தில் பல கைது நடவடிக்கைகள் நடந்துள்ளன. குறிப்பாக விவசாயிகள்  போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும். தனியார் கல்லூரியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அது கொலையா, தற்கொலையா என்று விசாரிக்க வேண்டும்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி: அந்த கல்லூரியில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளது. அதுகுறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமசாமி: செயின் பறிப்பு அதிகரித்துள்ளது.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி: சென்னையில் மட்டும் அதிக அளவில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. திருட்டு, செயின் பறிப்பை  பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  ராமசாமி:  ஜல்லிக்கட்டு குறித்த விஷயத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் மாவட்டங்களில் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 10 பேர் மீது வழக்கு பதிவு ெசய்யப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று,  அவர்கள் குறிப்பிடும்  இடங்களில் நடத்த வேண்டும். அனுமதி இல்லாமல் நடத்தினால் வழக்கு பதிவு செய்கிறார்கள். மேலும் உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது.

ராமசாமி: கூட்டம் நடத்தும் போது அல்லது கூட்டத்தினர் மீது எப்படி துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்று விதி உள்ளது. தமிழகத்தில் விதிமுறை மீறப்படுகிறது.  முதல்வர் எடப்பாடி: காங்கிரஸ், திமுக ஆட்சிக் காலத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளன. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ராமசாமி: ஒரு வண்டியின் மீது ஏறி நின்று சுடுவதற்கு விதி கிடையாது. (தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்) முதல்வர் எடப்பாடி: எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள். அதுகுறித்து விசாரணை நடக்கிறது. விரைவில் உண்மை வெளியில் வரும்.


Tags : Thoothukudi shooting, Congress, Edappadi description
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...