விளைநிலத்தில் உயர் மின்கோபுரம் அமைக்கும் விவகாரம்: முதல்வர், அமைச்சர்களுடன் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் மோதல்

சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது: மின் உயர் கோபுரம் அமைப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தபோது, மதுரையிலிருந்து இலங்கைக்கு கேபிள் வழியாக கொண்டு செல்கின்றார்கள். ஏன் அதற்கு மாற்று வழியை ஆராயக்கூடாது  என்ற கேள்வியைக் கேட்டிருந்தார். அதைக்கூட முடியாது என்று இப்போது மத்திய அரசுக்கு தொழில்நுட்ப நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்குள்ள விவசாயிகளிடம் தொடர்ந்து ஏதாவது ஒரு போராட்டத்திற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.  எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்: எங்களை சமாதானப்படுத்துவதை விட, பாதிக்கப்பட்ட விவசாயிகளை அழைத்து பேசி சமாதானப்படுத்த வேண்டும். அதை நீங்கள் செய்யுங்கள். அமைச்சர் தங்கமணி: எங்களோடு விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடக்கும் இடத்திற்கு இடத்திற்கு சென்று விவசாயிகளை போராட தூண்டுகிறார்கள். (அப்போது திடீரென திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி, அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர் தங்கமணியும் சில வார்த்தைகளை பேசினார்.  இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது) மு.க.ஸ்டாலின்: தூண்டி விட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதனால் தான் எங்களுடைய உறுப்பினர் மறுக்க வேண்டும் என்பதற்காகத்தான் எழுந்தாரே தவிர வேறொன்றும் அல்ல. முதல்வர் எடப்பாடி: அமைச்சர் விளக்கத்தை கொடுக்கிறார். அதற்கு எதிர்க்கட்சி தலைவர் பதில் அளிக்கிறார். ஆனால் அமைச்சர் பேசும் போது ஒரு உறுப்பினர் குறுக்கிட்டு பேசுவது சரியானது அல்ல.

துணை முதல்வர் ஓ.பி.எஸ்:  கையை நீட்டி பேசுவது எந்தவிதத்தில் நியாயம். சபாநாயகர் தனபால்:உறுப்பினர் பேச அனுமதி கேட்டிருந்தால் அனுமதி கொடுத்திருப்பேன். இது போன்ற செயல்களை செந்தில்பாலாஜி செய்யக்கூடாது. மு.க.ஸ்டாலின்: அமைச்சர் இடையில் தேவையற்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தூண்டிவிடக்கூடிய நிலையில், கொச்சைப்படுத்தக்கூடிய வார்த்தைகளை சொல்லி இருக்கிறார். எனவே, அதுவும் தவறு தான்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மின்கோபுரத்திற்கு அடியில் நின்று கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் டியூப் லைட்டை பிடித்து காட்டுகிறார். இது விவசாயிகளை பீதியடைய செய்யும் செயல். அந்த மின் கோபுரத்தை கூட நாங்கள் அமைக்கவில்லை, நீங்கள் அமைத்தது தான்.  அமைச்சர் தங்கமணி: நீங்கள் தடுப்பதாக நான் சொல்லவில்லை.  நாடாளுமன்ற  உறுப்பினர்கள் மீண்டும், மீண்டும் கூட்டத்தை போட்டு விவசாயிகளை, ‘’நீங்கள் விடாதீர்கள்’’ என்று சொல்கிறார்கள். தமிழகத்தின் நலன் பாதிக்கப்படக்கூடும் என்ற அடிப்படையிலே தான் உறுப்பினர்களுக்கு சொல்ல வேண்டிய கடமைக்காக சொன்னேன். நீங்களும் சரி, நாங்களும் சரி தமிழகத்தின் நலனுக்காகத்தான் போராடுகிறோம்.

Related Stories: