திமுக எம்எல்ஏக்களை மட்டும் ஏன் அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை? பேரவையில் கூச்சல், குழப்பம்

 சட்டப் பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தின்போது கன்னியாகுமரி ஆஸ்டின்(திமுக) பேசியதாவது:  எனது தொகுதியில் நடக்கும் அரசு விழா அழைப்பிதழில் எனது பெயரை போடாமல், டெல்லி பிரதிநிதியின் பெயரை போட்டு நிகழ்ச்சி நடத்துகின்றனர். இது உரிமை மீறல் பிரச்னை. இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.  சபாநாயகர் தனபால்: திடீரென்று கேட்டால் உடனடியாக பதில் அளிக்க முடியாது. இது உரிமை மீறலுக்கு கீழ் வருகிறதா என்பது குறித்து அந்த மாவட்ட கலெக்டரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவரிடம் இருந்து பதில் வரட்டும் அதன் அடிப்படையில் முடிவை அறிவிப்பேன்.  (தொடர்ந்து பேச முயன்ற ஆஸ்டினுக்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர் எழுந்து நின்றதால் பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.)  

 இதையடுத்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆஸ்டீன், அவருடைய தொகுதியில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளின் விளம்பரங்களில் அவருடைய பெயரை போடாமல் டெல்லி பிரதிநிதியின் பெயரைப் போட்டு நிகழ்ச்சி நடத்துவதாக உரிமை மீறல் பிரச்சினை கொடுத்திருக்கிறார். நான்கைந்து நாட்கள் ஆகிவிட்டது. எனவே அதற்கு விளக்கம் கேட்கிறார்.

 சபாநாயகர்: எனது கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். மற்ற கட்சி எம்பி, எம்எல்ஏக்களை முறைப்படி அழைக்க வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம்.   துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தேனி மாவட்டத்தில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் அடிக்கல் நாட்டு விழாவில் பெரியகுளம் திமுக எம்எல்ஏவை அழைத்தோம். அவரும் வந்திருந்தார். மின்சார துறை நிகழ்ச்சிக்கும் அழைத்தோம். சில மாவட்டங்களில் அழைப்பதில்லை என்கிறீர்கள். எங்கு என்பதை எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால் தீர்வு காணப்படும்.  மு.க.ஸ்டாலின்: இது கன்னியாகுமரி மாவட்டம். ஆஸ்டின் தொகுதியில் மட்டுமல்ல கரூர் தொகுதியில் அரக்குறிச்சி தொகுதியில், ஏன் ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் இதுபோன்ற பிரச்சினை இருந்துகொண்டே இருக்கிறது.   அமைச்சர் தங்கமணி: ஓகி புயலால் குமரி மாவட்டம் பாதிக்கப்பட்ட போது, ஆய்வு கூட்டம் நடத்தினோம். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் அவருக்கு முறையாக அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர் ஒரு நாள் மட்டும் தான் வந்தார்.

 சபாநாயகர்: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான அழைப்பு வழங்க வேண்டும். மு.க.ஸ்டாலின்:   முதல்வர் தொகுதியில், துணை முதல்வர் இருக்கக்கூடிய தொகுதியில் அல்லது மாவட்டத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. பெயர்களோடு சில இடங்களில் அறிவிப்பதில்லை. ஆனால் தொலைபேசியில் சொல்கிறார்கள். நாங்களும் போகச் சொல்கிறோம். ஆனால், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வேண்டுமென்றே திட்டமிட்டு எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை.  கரூர் மாவட்டத்தில் நடந்த ஆய்வு கூட்டங்களுக்கு திமுக எம்எல்ஏ, எம்பிக்களுக்கு அழைப்பு இல்லை. இதற்கு பிறகாவது நல்ல முடிவு வரும் என்ற சூழ்நிலையில் துணை முதல்வர் விளக்கம் தந்திருக்கிறார். இது முறைப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

காவல் ஆணையம் குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும்:

காவல் மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீது உறுப்பினர்கள் விவாதத்துக்கு முதல்வர் எடப்பாடி பதில் அளித்தார். இதையடுத்து திமுக உறுப்பினர் பொன்முடி, “திமுக ஆட்சியில் காவலர்களின் குறைகளை தீர்க்க காவல் ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போதும் காவலர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அதனால் காவல் ஆணையம் அமைக்கப்படுமா?” என்று கேள்வி கேட்டார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்து பேசும்போது, “காவல் ஆணையம் அமைப்பது குறித்து தமிழக டிஜிபியிடம் இருந்து கருத்துரு வந்துள்ளது. அதனால் 4வது காவல் ஆணையம் அமைப்பது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது” என்றார். மானிய கோரிக்கை மீதான கூட்டம் முடிந்ததும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முதல்வரின் இருக்கைக்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து முதல்வருக்கு போலீஸ் அதிகாரிகளும் தலைமை செயலகம் வந்து நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: