நாடாளுமன்ற துளிகள்

திருநங்கை உரிமையை பாதுகாக்கும் மசோதா:

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், மக்களவையில் நேற்று திருநங்கைகளின் உரிமைகள் பாதுகாப்பு மசோதாவை அறிமுகம் செய்தார். இந்த மசோதா திருநங்கைகளுக்கு சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் அதிகாரம் அளித்தலுக்கான வழிமுறையை வழங்குகிறது. அவர்களின் உரிமைகள் பாதுகாக்க வழிவகுக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், இந்த மசோதா தாக்கல் செய்வதை வெளிப்படையாக எதிர்க்க விரும்பினார். ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் கர்நாடகா அரசியல் பிரச்னை குறித்து கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டுக் கொண்டிருந்ததால் அவரால் பேச முடியவில்லை. பின்னர், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிேயறினார்கள். திருநங்கைகள் பிச்சை எடுப்பது குற்றம் என்று அறிவிக்கப்பட இருந்த பிரிவு, மசோதாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியின்போது இந்த பிரிவு மசோதாவில் இடம் பெற்றிருந்தது.

முறைப்படுத்தப்படாத வைப்பு நிதி மசோதா :

மக்களவையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முறைப்படுத்தப்படாத வைப்புகள் நிதி திட்ட மசோதாவை அறிமுகம் செய்து பேசினார்.  

தற்போதைய ஓழுங்குமுறைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் கடுமையான நிர்வாக நடவடிக்கைகள் இல்லாதது ஆகியவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஏழைகள்  மற்றும் அப்பாவி மக்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை நிறுவனங்கள் ஏமாற்றி விடுகின்றன.  நாட்டில் நடைபெறும் இதுபோன்ற சட்ட விரோத வைப்பு நிதிகள் மூலமாக ஏற்படும் அச்சுறுத்தலை கையாளுவதற்கு இந்த மசோதா உதவும். இந்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்ததும் கர்நாடக அரசியல் பிரச்னையை கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

₹6க்கு சானிட்டரி நாப்கின்:

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், “மாதவிடாய் கால சுகாதார திட்டத்தின் கீழ் 6 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட பாக்கெட், இளம்பெண்களுக்கு ரூ.6 என்ற விலையில் வழங்கப்படுகிறது.

சமூக சுகாதார பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக சென்று இந்த நாப்கின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் அங்கன்வாடிகள், பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றது. மாதவிடாய் சுகாதார திட்டத்துக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருகின்றது. ஆஷா எனப்படும் சமூக சுகாதார பணியாளர்கள், ஒரு சானிட்டரி நாப்கின் பாக்கெட்டுக்கு ரூ.1 பெறுகின்றனர்,” என்றார்.

Related Stories: