×

பல்லாவரம் ஏரியில் தேங்கிக் கிடக்கும் 1.25 லட்சம் டன் குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும்: திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது: பல்லாவரம் தொகுதி பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலே இப்போது ஏரி தூர்வாரப்பட்டு வருகிறது. அதற்கு ஒருபுறமாக 25 ஆண்டுகாலம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டன் குப்பை தேங்கி கிடக்கிறது. அதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இங்கே எடுக்கப்படுகிற குப்பை எல்லாம் திமுக ஆட்சியில், அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் 44 கோடியில் 50 ஏக்கரில் வண்டலூர் பக்கத்தில் உள்ள வேங்கடமங்கலத்தில் இடம் கொடுத்து, அந்த இடத்தில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. ஜவகர்லால் நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் அந்த பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த குப்பை எல்லாம் அங்கு சென்றால்தான் அங்கே நீர் ஆதாரம் வரும். எனவே, இந்த 1 லட்சத்து 25 ஆயிரம் டன் குப்பையை உடனடியாக அகற்றுவதற்கு இந்த அரசு முன்வர வேண்டும்.

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: பல்லவபுரம் நகராட்சியில், வார்டு 23ல் அமைந்துள்ள பெரிய ஏரியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில், 30 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கொட்டப்பட்டு வந்தன. பல்லவபுரம்  பெரிய ஏரி பகுதியில் குப்பை கொட்டப்படும் இடத்தின் அருகில், தோராயமாக 350 வீடுகள் மற்றும் 40 வணிக வளாகங்கள் உள்ளன.  இந்நகராட்சியில், நாளொன்றுக்கு 110 மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது. தற்போது நகராட்சிக்கு உட்பட்ட 6 இடங்களில், 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பசுமை உரக்குடில்கள் அமைக்கப்பட்டு, குப்பை தரம் பிரித்து  உரமாக மாற்றப்பட்டு,  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பல்லவபுரம் நகராட்சியில் பெரிய ஏரியில், 5 ஏக்கர் பரப்பளவில்   30 ஆண்டுகளுக்கு முன் கொட்டப்பட்ட குப்பை தரம் பிரித்து, உயிரியல் அகழாய்வு முறையில் அகற்றுவதற்கு, 7 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. இப்பணிகள் ஓராண்டு காலத்திற்குள் முடிவுறும். இப்பணிகள் முடிவுறும் போது,  ஏரியின் 5 ஏக்கர் நிலம் மீட்கப்படுவதுடன், ஏரியின் நீர்பிடிப்பு பகுதி அதிகமாகி,  நிலத்தடி நீரும்  உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Pallavaram Lake, Junk, DMK MLA E.Karunanidhi
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...