×

அமைந்தகரையில் 60 லட்சம் கேட்டு சிறுமியை கடத்திய வேலைக்காரி காதலனுடன் கைது: 8 மணி நேரத்தில் போலீசார் அதிரடி

அண்ணா நகர்: சென்னை அமைந்தகரை, கண்செனாய் நகர், செல்லம்மாள் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ் (35). தனியார் சாப்ட்வேர் நிறுவன ஊழியர். இவரது மனைவி நந்தினி (33). தனியார் மருத்துவமனை டாக்டர். இவர்களது மூன்றரை வயது மகள் அன்விகா. முகப்பேரிலுள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இவர்களுடைய வீட்டில் வேலை செய்து வந்தவர் அம்பிகா (32). நேற்று முன்தினம் மதியம் அன்விகாவை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார். சிறிது நேரத்தில் அம்பிகா மற்றும் மகள் அன்விகா ஆகியோர் மாயமாகினர். பின்னர் வேலைக்காரி அம்பிகா செல்போனில் இருந்து நந்தினிக்கு போன் வந்தது. அதில் பேசிய அம்பிகா தன்னையும், அன்விகாவையும் யாரோ கடத்தி விட்டதாகவும், எங்கு இருக்கிறோம் என தெரியவில்லை எனவும் கூறி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அதே செல்போனில் பேசிய மற்றொரு நபர் ‘‘இருவரையும் உயிரோடு விட வேண்டும் என்றால் 60 லட்சம் பணம் தர வேண்டும்’’ என மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதுபற்றி அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்யப்பட்டது.  அப்போது சிவப்பு நிற கார் மட்டும் அந்த வழியாக சென்றது பதிவாகி இருந்தது. இதனை கொண்டும் செல்போன் டவர் மூலம் கோவளத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி கார் வருவதும் தெரிந்தது. இதை அடுத்து செங்குன்றம் பகுதியில் போலீசார் காரை மடக்கி தப்பியோட முயன்ற ஆசாமியை மடக்கி பிடித்தனர்.

போலீஸ் விசாரணையில் முகமது கலிமுல்லா சேட் என்பதும், வேலைக்காரி அம்பிகாவுடன் சேர்ந்து சிறுமியை கடத்தியதும், இருவரையும் கோவளத்தில் உள்ள விடுதியில் தங்க வைத்திருப்பதாகவும் கூறியதை அடுத்து தனிப்படை மற்றும் கோவளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு அம்பிகாவை கைது செய்தனர்.  இதுகுறித்து கூடுதல் கமிஷனர் தினகரன் கூறியதாவது:  முகமது கலிமுல்லா சேட் செங்குன்றத்திலும், அம்பிகா பாடியிலும் வசித்து வந்தனர். இருவரும் திருமங்கலம் ரெஸ்டாரண்டில் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அம்பிகாவிற்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.  வேலையை விட்டு நின்ற அம்பிகா ஆன்லைனில் வீட்டு வேலைக்கு நந்தினி கொடுத்த விளம்பரத்தை பார்த்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் சேர்ந்தார். தொடர்ந்து முகமது கலிமுல்லா சேட்டுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். முகமது கலிமுல்லா சேட் ஆரம்பத்தில் ஒரு படத்தில் நடித்து உள்ளார்.

சினிமா மோகம் கொண்ட அவர் மாடலிங் செய்துள்ளார். குறும்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அம்பிகா தான் வசதியான இடத்தில் வேலை செய்து வருவதாகவும், விரைவில் பணக்காரர்களாக மாறி வாழ்வில் செட்டில் ஆக வேண்டும் என்றால் அவர்களது மகளை கடத்தி 60 லட்சம் கேட்கலாம் என முடிவு செய்துள்ளனர்.  அதன்படி பள்ளி முடிந்து வந்த சிறுமியை அம்பிகா அழைத்து வந்து முகமது கலிமுல்லா சேட்டின் காரில் கோவளம் வந்து விடுதியில் அறை எடுத்து இருவரையும் விட்டுவிட்டு செல்போனில் பணம் கேட்டு மிரட்டிவிட்டு முகமது கலிமுல்லா சேட் செங்குன்றம் வந்துள்ளார். மேலும் சிறுமியை கடத்துவது எப்படி? பணம் கேட்டு எப்படி மிரட்ட வேண்டும்? என யூ டியூப் பார்த்து செய்துள்ளார்.

சிறுமி கடத்தப்பட்ட 8 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு சிறுமியை மீட்டதோடு கடத்தல்காரர்களை கைது செய்துள்ளோம். வீட்டு வேலைக்கு ஆன்லைனில் ஆள் தேர்வு செய்பவர்கள் போலீஸ் சார்பில் ஆன்லைனில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 1000 கட்டணம் செலுத்தி வேலைக்கு சேர்க்க நினைக்கும் நபர் குறித்த தகவல்களை பதிவு செய்தால் உளவு பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவு மூலமாகவும் விசாரணை செய்து அவர்கள் குற்றப்பின்னனியில் உள்ளார்களா என்று கண்டறிந்து அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும்.   இவ்வாறு தெரிவித்தார்.


Tags : Arrested, girl, kidnapped, maid, lover, arrested
× RELATED உதகையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 380...