வாடகை தருவதாக உரிமையாளர்களிடம் பெற்று கார்களை அடகு வைத்து மோசடி: வாலிபர் கைது ,.. 17 கார்கள் பறிமுதல்

துரைப்பாக்கம்: அரக்கோணம் அடுத்த கிருபில்ஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (24). விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்த சிலம்பரசன் (31). சென்னை துரைப்பாக்கத்தில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். சிலம்பரசன் ஹரிகிருஷ்ணனிடம் காரை வாடகைக்கு தந்தால் மாதம் 28 ஆயிரம் வாடகை தருவதாக கூறி காரை ஆவணங்களுடன் வாங்கி சென்றார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஹரிகிருஷ்ணனை தொடர்பு கொண்டு, ‘‘உங்களது காரை 3 லட்சத்துக்கு அடமானம் வைத்துள்ளீர்கள். தவணையை கட்டுமாறு கூறியுள்ளார். ஹரிகிருஷ்ணன் அதிர்ச்சியுடன் சிலம்பரசனை தொடர்பு கொண்டபோது சரியாக பதிலளிக்காமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

புகாரின்பேரில்  கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் அடையாறு துணை கமிஷனர் பகலவன், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் லோகநாதன் மேற்பார்வையில் துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்.இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, தலைமை காவலர்கள் திருமுருகன், கௌதமன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து சிலம்பரசனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கார் உரிமையாளரிடம் டிராவல்ஸ் நடத்துவதாகவும், மாத வாடகை தருவதாகவும் கூறி தனது கூட்டாளிகள் மூலம் கார் மற்றும் அதற்கான ஆவணங்களை அடமானம் வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அடமானம் வைக்கப்பட்டு இருந்த 75 லட்சம் மதிப்புள்ள 17 கார்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: