நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த குமாரசாமிக்கு உத்தரவிட்ட ஆளுநரின் 2வது கெடுவும் நிராகரிப்பு: திங்கட்கிழமை மீண்டும் விவாதம்; சபாநாயகர் அறிவிப்பால் பரபரப்பு

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா  விதித்த இரண்டாவது கெடுவையும் முதல்வர் குமாரசாமி நிராகரித்தார்.  தீ்ர்மானத்தின் மீது விரிவான விவாதம் நடத்த வேண்டியிருப்பதால் அவையை  திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்ததால் பரபரப்பு  ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி குமாரசாமி  தலைமையில் நடந்து வருகிறது. காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 14 பேர் ராஜினாமா செய்ததை அடுத்து, இப்போது  கூட்டணியின் பலம் 101 ஆக  குறைந்தது. அதே சமயம் 105 எம்எல்ஏக்களை கொண்ட பாஜவுக்கு இரு சுயேச்சை  ஆதரவளித்ததால் அவர்களின் பலம் 107ஆக அதிகரித்தது. இந்த பிரச்னைக்கு இடையில் கடந்த 12ம் தேதி கூடியது.  அப்போது, முதல்வர் குமாரசாமி, தனது ஆட்சியின் மீது நம்பிக்கை தீர்மானம்  கொண்டுவர வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு கொடுத்தார். அதை ஏற்ற சபாநாயகர்,  தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த அனுமதி வழங்கினார். மேலும் நம்பிக்கை  வாக்கெடுப்பு ஜூலை 18ம் தேதி நடக்கும் என்றும் சபாநாயகர் அறிவித்தார். ஏற்கனவே அதிருப்தி எம்எல்ஏக்களின் மனு சுப்ரீம் கோர்ட் விசாரணையில் உள்ளது.

இதையடுத்து வியாழக்கிழமை பேரவை கூடியதும்,  முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது பேசினார்.  அப்போது பாயின்ட் ஆப் ஆர்டர் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர்  சித்தராமையா, உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக இல்லாததால், முழு உத்தரவு  கிடைக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று  கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜவினர் அமளியில் ஈடுபட்டனர்.  இதனால் கூச்சல் குழுப்பம் எழுந்ததால் சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாஜவினர் இரவு முழுவதும்  பேரவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஆளுநர் வஜூபாய்  வாலா, நம்பிக்கை வாக்கெடுப்பை நேற்று பிற்பகல் 1.30 மணிக்குள் நடத்தி  முடிக்க வேண்டும் என்று முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் எழுதினார். இதை  தொடர்ந்து நேற்று சட்டப்பேரவை 11 மணிக்கு கூடியதும் எழுந்து பேசிய முதல்வர்  குமாரசாமி, சட்டசபை விவகாரங்களில் தலையிட ஆளுநருக்கு உரிமையில்லை.  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சபாநாயகர் தான் முடிவு செய்வார்  என்று தெரிவித்தார். மேலும் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார்.

இதைதொடர்ந்து பிற்பகல் 1.30 மணி ஆன  நிலையில், ஆளுநர் அளித்த கெடுவின் படி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த  வேண்டும் என்று பாஜவினர் அமளியில் ஈடுபட்டனர். இதை சபாநாயகர் ஏற்க  மறுத்தார். அப்போது எழுந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சித்தராமையா,  விவாத்தின் மீது 20 உறுப்பினர்கள் பேச வேண்டி இருப்பதால் திங்கட்கிழமை தான்  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும் என்று கூறினார். இதற்கு பாஜவினர்  கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பிற்பகல் 3 மணிக்கு, ஆளுநர்  மீண்டும் குமாரசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், நேற்று மாலை 6  மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் படி உத்தரவிட்டிருந்தார்.

ஆளுநரின்  இரண்டாவது கெடுவையும் நிராகரித்த முதல்வர் குமாரசாமி, ஆளுநரிடம் இருந்து  எனது ஆட்சியை பாதுகாக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.  உடனே, எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா எழுந்து, ஆளுநரின் உத்தரவை மதிக்க  வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை  விடுத்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், ஆளுநரின் உத்தரவு என்னை  கட்டுப்படுத்தாது. அவர் முதல்வருக்கு தான் கடிதம் எழுதியுள்ளார். எனவே  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது முதல்வரின் கையில் தான் உள்ளது என்றார். இதையடுத்து  எடியூரப்பா எழுந்து, விவாதத்தில் பாஜ உறுப்பினர்கள் பேச வேண்டியது  எதுவுமில்லை. கூட்டணி உறுப்பினர்கள் யார் பேச வேண்டுமோ பேசட்டும். இரவு  11.30 மணி ஆனாலும் நாங்கள் காத்திருக்கிறோம். ஆளுநரின் கெடுப்படி நம்பிக்கை  வாக்கெடுப்பை நடத்தி /முடியுங்கள் என்று கேட்டுக்கொண்டார். எடியூரப்பாவின்  கோரிக்கையை ஏற்பது போன்றே பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார், நம்பிக்கை  வாக்கெடுப்பு தீர்மானத்தின்  மீது மேலும் விரிவான விவாதம் நடக்க  வேண்டியிருப்பதால் திங்கட்கிழமை வரை சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார். நேற்று இரவு 8.30 மணி வரையில் பேரவையில் கூட்டணி எம்எல்ஏக்கள் நம்பிக்கை  வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ்குண்டுராவ் மனு

அதிருப்தி எம்எல்ஏக்களை சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்குமாறோ, நம்பிக்கை  வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறோ கொறடா உத்தரவு பிறப்பித்து  உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்புவழங்கியிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து  கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆளுநர் உத்தரவு: குமாரசாமி வழக்கு

பேரவையில்  நேற்று பிற்பகல் 1.30க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று  ஆளுநர் குமாரசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதை நிராகரித்த  குமாரசாமிக்கு மீண்டும் அவர் நேற்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை  வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடிதம் எழுதினார். ஆளுநரின் 2வது  மனுவையும் நிராகரித்த குமாரசாமி, சபை நடவடிக்கையில் தலையிட ஆளுநருக்கு  உரிமையில்லை என்று வலியுறுத்தினார். மேலும் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: