பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் கர்நாடகா திறந்த தண்ணீர் மேட்டூருக்கு 22ல் வரும்

மேட்டூர்: கர்நாடக அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர், வரும் 22ம் தேதி இரவுக்குள் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக முதல்வர் குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படியும், மாண்டியா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், காவிரி இருந்து தண்ணீர் திறக்கப்படும் என கடந்த 9ம் தேதி அறிவித்திருந்தார். இதையொட்டி, கடந்த 16ம் தேதி நள்ளிரவு முதல் கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 850 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் நேற்று பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வந்து சேரவில்லை.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கர்நாடக அணைகளில் இருந்து, கடந்த 16ம் தேதி விநாடிக்கு 850கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. ேநற்று காலை முதல் விநாடிக்கு, 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து, ேமட்டூர் அணை 184கி.மீ தொலைவில் உள்ளது. இந்த தண்ணீர் 22ம் தேதி (திங்கட்கிழமை) இரவுக்குள் மேட்டூர் அணைக்கு வந்து சேரும்’ என்றனர். இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால், நேற்று முன்தினம் 40.22 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 39.91அடியாக குறைந்தது.

Related Stories: