சூறைக்காற்றால் படகு கவிழ்ந்து குமரி மீனவர்கள் 5 பேர் கடலில் மூழ்கினர்

* 2 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்

* 3 பேரை தேடும் பணி தீவிரம்

நாகர்கோவில்: சூறை காற்று காரணமாக படகு கவிழ்ந்து, குமரியை சேர்ந்த 5 மீனவர்கள் கடலில் மூழ்கினர். இவர்களில் 2 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். 3 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள கடல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் திடீரென சூறை காற்றுடன் கன மழை பெய்தது. குமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் வீசிய சூறைகாற்று வீசியது. இதனிடைேய, குமரி மாவட்டம் நீரோடியை சேர்ந்த ஸ்டான்லி (47), ஜாண்போஸ்கோ (46), சகாயம் (32), நிக்கோலஸ் (40), ராஜூ (50) ஆகியோர், கேரள கடலில் மீன் பிடிக்க கொண்டிருந்தனர். நேற்றும் முன்தினம் மாலையில் கரைக்கு வந்து கொண்டு இருந்தனர். இரவு 11.30 மணியளவில் இவர்கள் கேரள துறைமுகத்தை நெருங்கிய வேளையில் காற்று வேகமாக வீசியது. இதனால் கரையை நெருங்க முடியாமல் படகை நங்கூரமிட்டு காத்திருந்தனர். நேற்று காலையில் வீசிய சூறை காற்றில் படகு துறைமுக தடுப்பு சுவரில் மோதி உடைந்து கிடந்தது. அதில் இருந்த 5 மீனவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. இதையடுத்து சக மீனவர்கள் மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், மாலை 3 மணியளவில் மாயமான ஸ்டான்லி, நிக்கோலஸ் ஆகிய மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். மற்ற 3 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

மணல்திட்டில் 8 மீனவர்கள் மீட்பு: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் இருந்து கடந்த 17ம் தேதி காலை மீனவர் இன்னாசிமுத்துக்கு சொந்தமான நாட்டுபடகில் முகம்மது பாரூக் (45), செந்தில்பாண்டி (36), உள்ளிட்ட 8 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் மாலையில் படகு கடலில் மூழ்கியுள்ளது. உடனே, மீனவர்கள் கடலில் குதித்து அருகில் இருந்த ஏழாம் மணல் திட்டில் நீந்தி கரையேறினர். இப்பகுதி இலங்கைக்குள் இருப்பதால், நேற்று காலை அங்கு ரோந்து வந்த அந்நாட்டு கடற்படையினர், 8 பேரையும் மீட்டு விசாரித்தனர். பின்னர், மீனவர்களை அழைத்துக்கொண்டு இந்திய கடல் எல்லைக்கு வந்து இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். நேற்று பகல் 12 மணிக்கு மண்டபம் முகாமுக்கு அழைத்து வந்து பாம்பனுக்கு அனுப்பிவைத்தனர்.

Related Stories: