×

கர்நாடக அரசை கவிழ்க்கும் முயற்சி எதிர்க்கட்சிகளின் ஆட்சி இந்தியாவில் இருக்கக்கூடாது என்பதே பாஜவின் திட்டம்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று காலை  10.14 மணி விமானத்தில் டெல்லி சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பு கேட்டிருக்கிறார். அங்கு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் கொறடா அதிகாரம் என்ன என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே ஆளுநர் அதில் தலையிட்டு  உடனடியாக  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று கூறுவது  சரியானது அல்ல.  ஆளுநரின் இந்த நடவடிக்கை அவரது அதிகார வரம்புக்கு மீறிய செயலாகும்.  சட்டமன்றத்தில் விவாதங்கள் நடக்கும்போது நிதித்துறை சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால் மட்டும் தன்னுடைய கருத்தைக் கூறலாம்.  மற்ற பிரச்னைகளில்  அவர் தலையிட முடியாது. ஆளுநர்கள் தங்களுடைய அதிகார வரம்பு என்ன என்பதை தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும். கர்நாடக ஆளுநரின் நடவடிக்கைகள் ஜனநாயக விரோத செயலாகும். எதிர்க்கட்சிகளின் ஆட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இருக்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் நிலையான அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் பாஜ இறங்கியுள்ளது.  பாஜவின் இந்த செயல்  ஜனநாயகத்தை சீர் குலைக்கும் செயலாகும்.

வேலூர் பாராளுமன்ற தோகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அசோகன் என்பவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ இல்லை.  அவர் ஏற்கனவே  ஒருமுறை சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் அவருக்கு கட்டளையிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி  ஆசிரியர்களின் வருகைகளை பதிவு செய்யும் பயோமெட்ரிக் மிஷின் கருவியில் தமிழ்மொழி இடம்பெறாமல் இந்தி மொழி  இடம் பெற்றது எவ்வாறு என்று தெரியவில்லை.  தமிழக அரசு அதிகாரிகளின் கவனக்குறைவா  அல்லது தமிழக அரசே மத்திய அரசை கண்டு அச்சப்பட்டு நடக்கிறதா?  என்பது பற்றி தெரிந்தாக வேண்டும். இந்த பிரச்னையில் உடனடியாக அமைச்சர் தலையிட்டு இந்த தவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.  அமைச்சர் இனிமேலும் இதேபோல் தவறு நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : BJP's plan, not ,rule India, opposition
× RELATED தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது...