மக்கள் ஆதரவு திமுகவுக்கு தான்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: சட்டப் பேரவை இடைத் தேர்தலில் 22 இடங்களில் 13 இடங்களை மக்கள் திமுகவுக்கு கொடுத்திருக்கிறார்கள். இது திமுகவுக்கு மக்கள் ஆதரவு இருப்பதை காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்தார். சட்டப் பேரவையில் போலீஸ் துறை மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினர்கள் பேசியதாவது: திருக்கோயிலூர், பொன்முடி(திமுக): தமிழக மக்கள் குடிநீர் விஷயத்தில் தெளிவாக உள்ளனர் என்று பாராளுமன்றத் தேர்தலின் போது சொன்னீர்கள். இடைத் தேர்தலில் 22 இடங்களில் 13 தொகுதிகளை திமுக கைப்பற்றியது.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: மக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது. நீங்கள் செய்ய முடியாத வாக்குறுதிகளை சொல்லி வெற்றி பெற்றீர்கள். மு.க.ஸ்டாலின்:  22 இடங்களில் தேர்தல் நடந்தது என்றால், 13 இடங்களில் திமுக வெற்றிபெற்றிருக்கின்றது. 9 இடங்களில் உங்களுடைய அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கின்றது. 9 பெரியதா? 13 பெரியதா? எனவே, மக்களின் ஆதரவு 13 என்றுதான் சொல்லமுடியும். ஏற்கனவே திருவாரூரைத் தவிர்த்து 12 தொகுதிகள் உங்களிடத்தில் இருந்த தொகுதிகள் அதை நாங்கள் கைப்பற்றியிருக்கின்றோம் என்று சொன்னால், எங்களுடைய வளர்ச்சியைத்தான் இது காட்டுகின்றது.அமைச்சர் செல்லூர் ராஜூ: மாங்காய் புளித்ததோ, வாய் புளித்ததோ என்று நாங்கள் சொல்ல மாட்டோம். கடந்த 2010ம் ஆடில் ரசாயன உரத்துக்கான மானியத்தை ரத்து செய்தது யார். அந்த கோப்பில் கையெழுத்து போட்டது யார். அதனால் தான் இப்போது ரசாயன உரம் ரூ.24 ஆயிரத்துக்கு விற்கிறது.

மு.க.ஸ்டாலின்: மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என்று சொன்னது உண்மைதான். இப்பவும் சொல்கின்றேன் நாங்கள் சொன்ன உறுதிமொழியில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம். நிச்சயமாக நிறைவேற்றுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு இந்தக் கேள்வியைக் கேளுங்கள். அதன் பிறகு, அதற்குப் பதில் சொல்கின்றோம். பொன்முடி: போலீஸ் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மாறுதல், நியமனங்களில் நியாயமாக, சுமூகமாக செயல்படவில்லை. சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்துக்கு முன்பாக தமிழகத்தில் 86 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றியுள்ளீர்கள்.முதல்வர்: நிர்வாகத்துக்காக இதுபோல அதிகாரிகளை மாற்றுவது வழக்கமான ஒன்று.அதில்  முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை.

பொன்முடி: போலீஸ் அதிகாரி ஜாங்கிட்  மாற்றப்பட்டு  9 ஆண்டுகளாக போக்குவரத்து விஜிலன்சில் இருக்கிறார்.முதல்வர்: நிர்வாக காரணத்துக்காக எந்த இடத்தில் போடப்படுகிறதோ அந்த இடத்தில் பணியாற்ற வேண்டும்.

பொன்முடி: முருகன் ஐபிஎஸ் அதிகாரி மீது ஒரு பெண் அதிகாரி புகார் கொடுத்தும், அந்த இடத்தில் இருப்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் அந்த இடத்துக்குப் போகவில்லை.

முதல்வர்: அவரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர் அந்த பணியில் இருக்க வேண்டிய அவசியம் கருதியதால் அவர் அங்கே இருக்கிறார். நாங்கள் ஏதும் தவறு செய்யவில்லை. அதனால் பயப்பட ேவண்டியதில்லை.

இதையடுத்து, ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் வெளியான குற்ற சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை பொன்முடி அவையில் படித்தார். அதற்கு அடுத்து முதல்வர், அமைச்சர்கள் திமுக குறித்து குற்றம்சாட்டி பேசினர். அதற்கு பதில் அளித்து பேசும் வகையில் சட்டப் பேரவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். இப்படி இரு தரப்பிலும் மாறி மாறி விவாதம் நடந்தது. நீண்ட நேர காரசார விவாதத்துக்கு பிறகு. இரு தரப்பு விவாதங்களையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். அத்துடன் விவாதம் முடிவுக்கு வந்தது.

Related Stories: