தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் சவரன் ரூ.27,000ஐ நெருங்கியது: 2 நாட்களில் ரூ.552 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் ஆபரண தங்கம் நேற்று சவரனுக்கு ₹248 அதிகரித்து ₹26,904க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் சவரன் ₹552 உயர்ந்துள்ளது.  தங்கம் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றம் பெற்று வருகிறது. அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகள், அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப்போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரியை 12.5 சதவீதமாக உயர்த்தியதால், சென்னையில் ஆபரண தங்கம் கடந்த 5ம் தேதி ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்து, வர்த்தக முடிவில் சவரனுக்கு ₹504 அதிகரித்து ₹26,232க்கு விற்கப்பட்டது. பின்னர் கடந்த 11ம் தேதி, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என முடிவு செய்ததால் தங்கம் சவரனுக்கு ₹448 அதிகரித்து ₹26,640க்கு விற்கப்பட்டது. இதன்பிறகு, தங்கம் விலையில் நேற்று முன்தினம் சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ₹304 உயர்ந்து, ₹26,656க்கு விற்பனையானது. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் சவரனுக்கு ₹248 அதிகரித்து ₹26,904ஐ எட்டியது. அதாவது ஒரு சவரன் தங்கம் முதல் முறையாக இமாலய உச்சத்தை தொட்டுள்ளது.

Advertising
Advertising

இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க கவுரவ செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், ‘‘அமெரிக்க பெடரல் ரிசர்வில் ஏற்கெனவே நடந்த முன்மாதிரி கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து தெரிவித்த பெடரல் ரிசர்வ் தலைவர் ஜான் வில்லியம், வட்டி குறைப்பு செய்ய இருப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இது வரலாறு காணாத விலை உயர்வு. டாலரை பொறுத்தவரை 2013ல் இருந்த அளவு விலை மீண்டும் வந்துள்ளது. இந்தியாவில் இந்த அளவுக்கு விலை உயர்வது இதுவே முதல் முறை. மேலும் உயர வாய்ப்புகள் உள்ளது’’ என்றார்.

Related Stories: