மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு: வர்த்தகர், வழக்கறிஞர்கள் போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையை  தனி மாவட்டமாக அறிவிக்க கோரி நேற்று நாகப்பட்டினம் மாவட்டம் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்தன. கடந்த ஜனவரி 8ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனியாக பிரித்து 33வது மாவட்டமாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, நெல்லையில் இருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டை தனியாக பிரித்து புதிய மாவட்டமாகவும் தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனால், மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. இந்தநிலையில், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கி இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகள், வரத்தக சங்கங்கள், வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி, நேற்று சீர்காழி தவிர குத்தாலம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய 3 தாலுகாக்களிலும் 6 ஆயிரம்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்துகடைகள், பெட்ரோல் பங்க் தவிர அனைத்து நிறுவனங்களும் திறக்கப்படவில்லை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி  மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு மயூரம் வழக்கறிஞர்  சங்க தலைவர் ராமசேயோன், மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க தலைவர்  வேலுகுபேந்திரன் உள்பட சுமார் 200 வக்கீல்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இதுபற்றி, மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் செந்தில்வேல் கூறுகையில், `மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது 20 ஆண்டு கோரிக்கையாகும். அரசு உடனடியாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். முதல்கட்டமாக இன்று (நேற்று) கடையடைப்பு போராட்டம் நடத்தியுள்ளோம். இது சம்பந்தமாக ஒரு குழுவினர் முதல்வரை சந்திக்க இன்று (நேற்று) சென்னை  சென்றுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

Related Stories: